Enable Javscript for better performance
இலங்கைக்கு எதிரான தீர்மானம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு தலைவர்கள் கண்டனம்- Dinamani

சுடச்சுட

  

  இலங்கைக்கு எதிரான தீர்மானம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு தலைவர்கள் கண்டனம்

  By dn  |   Published on : 29th March 2014 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  oppose

  இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக ஐ.நா.வில் நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் வெள்ளிக்கிழமை தனித்தனியே வெளியிட்ட அறிக்கை:

  கருணாநிதி: இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியுள்ளது.

  இந்த தீர்மானம் நிறைவேறியதன் மூலம், ஈழத் தமிழர் பிரச்னையில் சர்வதேச சமூகம் கொண்டுள்ள அக்கறையின் காரணமாக அடுத்த நகர்வு ஏற்பட்டுள்ளது என்பதில் ஓரளவு மன நிறைவு ஏற்பட்டுள்ளது.

  எனினும், அந்தத் தீர்மானத்தின்போது இந்தியா கடைப்பிடித்த அணுகுமுறை, உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமுதாயத்தை மீண்டும் ஏமாற்றத்திலும் வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது.

  சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நான் (கருணாநிதி) பேசியபோது, காங்கிரஸ் அரசு நன்றி மறந்த போதிலும், மதச்சார்பற்ற ஒரு அரசு இந்தியாவில் அமைக்கப்பட வேண்டுமென்ற எண்ணத்தோடு, வருங்காலத்தில் பொதுமன்னிப்பு அளிக்கக் வேண்டிய நிலைக்குக்கூட வரலாம் என்று குறிப்பிட்டேன்.

  ஆனால் இந்திய காங்கிரஸ் அரசு தமிழ் இனத்துக்கு முற்றிலும் எதிரான இந்த முடிவினை எடுத்திருப்பது நிரந்தரமாக தமிழர்களுக்கான வாயிலையே அடைத்துக் கொண்டதாகத் தெரிகிறது.

  திமுக குறிப்பிட்டவாறு இந்திய அரசு தன்னிச்சையாக ஒரு தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வராததோடு, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தையும் ஆதரிக்காமல் புறக்கணித்திருப்பது, குதிரை குப்புறத் தள்ளியதோடு, குழி பறித்த கதையாகவும் ஆகிவிட்டது.

  சர்வதேச சமூகத்தின் உணர்வோடு ஒன்றிப் போகாமல், முக்கியமான இந்தப் பிரச்னையில் மனித நேயமற்ற முடிவினை மேற்கொண்டதற்காக இந்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  பொன்.ராதாகிருஷ்ணன்: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைப் புறக்கணித்ததன் மூலம் இலங்கைக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல், வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

  இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலையை விசாரிக்க வேண்டும் என உலக நாடுகள் குரல் கொடுத்து வரும் நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையை காங்கிரஸ் அரசு எடுத்துள்ளது. இது தமிழர்களின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  தமிழர்களுக்கு எதிரான மனநிலையில் மத்திய காங்கிரஸ் அரசு இருப்பதை தமிழர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

  தமிழர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசோடு கைகோர்த்து செயல்படும் காங்கிரஸின் செயல் கண்டிக்கத்தக்கது.

  வைகோ: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தொடர்பாக ஐ.நா.வில் வாக்கெடுப்பு நடத்தியபோது, அதில் இந்தியா பங்கேற்கவில்லை. பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் விலாங்கு மீன் ஏமாற்று வேலையை செய்த 12 நாடுகளில் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.

  இதன் மூலம் தமிழர்கள் எந்நாளும் மன்னிக்க முடியாத துரோகத்தை இந்தியா செய்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் அதே வேளையில் சுதந்திர தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பை ஐ.நா. மூலம் நடத்த வேண்டும் என்றும் கோருகிறேன்.

  ஜி.ராமகிருஷ்ணன்: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல், வாக்கெடுப்பை இந்திய அரசு புறக்கணித்திருப்பது கண்டனத்துக்குரியது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் 2012, 13-ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசு செயல்படுத்தவில்லை.

  இந்த நிலையில் 2014-ஆம் ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்திருக்க வேண்டும்; அல்லது இந்தியாவே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். மாறாக இலங்கைக்குச் சாதகமாக வாக்கெடுப்பை புறக்கணித்திருப்பது சரியான நடவடிக்கை அல்ல.

  தொல்.திருமாவளவன்: இலங்கைக்கு எதிரான தீர்மான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்திருப்பது சர்வதேச நெறிமுறைகளுக்கும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. எனினும் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேறியுள்ளது.

  இலங்கையின் அதிபராக ராஜபட்ச உள்ளவரை சுதந்தரமான விசாரணை நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை. எனவே போர்க் குற்றங்களுக்கு உண்மையிலேயே நீதி வழங்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் கருதினால், ராஜபட்சவை அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai