சுடச்சுட

    
    clash1

    சேலம் ஜாமியா மசூதி வாயிலில் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, வேட்பாளர்கள் முன்னிலையில் திமுக - தேமுதிகவினர் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்டனர்.

    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சேலத்தில் அரசியல் கட்சியினர் பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை சேலம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.உமாராணி, தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் மசூதிகளில் தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்க முடிவு செய்தனர்.

    சேலம் மேட்டுத் தெருவில் உள்ள லால் மசூதியில் தொழுகை முடித்து வந்தவர்களிடம் உமாராணியும், கோட்டை மேல் தெரு மசூதியில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தவர்களிடம் எல்.கே.சுதீஷும் ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

    இதைத் தொடர்ந்து திமுக, தேமுதிக வேட்பாளர்கள் இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் ஒரே நேரத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் எதிரில் உள்ள ஜாமியா மசூதிக்கு சென்றனர்.

    நுழைவு வாயிலின் இருபுறமும் நின்று கொண்டு இரு கட்சியினரும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, தங்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தேமுதிகவின் கட்சிக் கொடியில் இருந்த பிளாஸ்டிக் குழாய், திமுகவினர் மீது பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், இந்திய முஸ்லிம் லீக், தமுமுக, எஸ்.டி.பி.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்களும், இஸ்லாமியர்களும் திரண்டு பாஜக கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால், அங்கு மேலும் பரபரப்பு அதிகரித்தது.

    சிறிது நேரத்தில் திமுக - தேமுதிக தொண்டர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மசூதியில் இருந்து தப்பிச் சென்ற தேமுதிகவினரை விரட்டிச் சென்று திமுகவினர் தாக்கத் தொடங்கினர். மேலும், எல்.கே.சுதீஷின் காரையும், அழகாபுரம் மோகன்ராஜ் எம்.எல்.ஏ. காரையும் சிலர் கைகளால் தாக்கத் தொடங்கினர்.

    நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே திமுக, தேமுதிக வேட்பாளர்கள் அங்கிருந்து அவசர அவசரமாகப் புறப்பட்டனர். இருப்பினும், தேமுதிகவினரின் கார்களை நிறுத்தி சிலர் கோஷங்கள் எழுப்பியதால் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து, அங்கு விரைந்து வந்த சேலம் தெற்கு காவல் உதவி ஆணையர் ஆர்.ராஜேந்திரன், ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட போலீஸார் இரு தரப்பினரையும் விலக்கிவிட்டு, அங்கிருந்து செல்ல அறிவுறுத்தினர்.

    வழிபாட்டு மையங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கும் நிலையில், சேலத்தில் மசூதிக்கு வெளியே இரு தரப்பினரிடையே மோதல் நடைபெற்றது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

    மசூதிக்கு வெளியே துண்டுப் பிரசுரம் வழங்கப் போவதாக தேமுதிக தரப்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், நாங்கள் அதற்கு அனுமதி மறுத்துவிட்டோம். இருப்பினும், அனுமதியின்றி இரு கட்சியினரும் பிரசாரம் செய்ய வந்துள்ளனர். சம்பவத்துக்கு முன்னதாக திமுகவினர் வேறு மசூதிக்கு வெளியே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    எதிர்பாராத நேரத்தில் இரு வேட்பாளர்களும் ஒரே இடத்தில் பிரசாரம் செய்ய வந்ததால், மோதல் நேரிட்டது.

    இந்தச் சம்பவம் குறித்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களோ அல்லது தாக்குதலில் காயமடைந்தவர்களோ புகார் தெரிவித்தால் வழக்குப் பதிவுசெய்யப்படும் என்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai