சுடச்சுட

    
    madurai_canvas1

    மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம் தமிழகத்துக்கும், சிவகங்கை தொகுதிக்கும் செய்த சாதனைகளைப் பட்டியலிடத் தயாரா என முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

    மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து மதுரையில் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது முதல்வர் ஜெயலலிதா பேசியது:

    மத்திய நிதியமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்ததற்கு அவர்தான் காரணம் என்பதையும் ஏற்கெனவே சுட்டிக் காட்டியிருந்தேன். இதுமட்டுமல்ல, தமிழகத்துக்கான மத்திய திட்ட மதிப்பீட்டைக் குறைத்து நிதி ஒதுக்கீடு செய்துவருவது வாடிக்கை என்பதையும் தெரிவித்திருந்தேன். இதற்கு பதிலளித்துப் பேசியுள்ள ப.சிதம்பரம், நான் உண்மையை மறைத்துப் பேசுவதாகவும், எழுதிவைத்துப் பேசுவதாகவும் கூறியுள்ளார்.

    தமிழகத்துக்கான இரண்டு கல்வித் திட்டங்களுக்கான நிதி ரூ.901 கோடியே 76 லட்சத்தை இதுவரை மத்திய அரசு தரவில்லை. திட்டச் செலவில் குறிப்பிட்ட தொகையைக் குறைத்து மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது உண்மை. 13-வது திட்ட சாலை பராமரிப்பு நிதி ரூ.931 கோடியை மத்திய அரசு தரவில்லை. இந்த புகார்கள் குறித்து ப.சிதம்பரம் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

    மேலும், இந்தியாவில் சில பகுதிகளில் தொழில்புரிவதற்காக சலுகைகள் வழங்கப்படுகின்றனவே, அந்த சலுகைகளை தென் தமிழகத்திற்கு ப.சிதம்பரம் நீட்டிக்காதது ஏன்? அவரால் தமிழகத்துக்கும், சிவகங்கை தொகுதிக்கும் கிடைத்த நன்மைகளைப் பட்டியலிட வேண்டும்.

    நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டியதை விட்டு, நான் பிரசாரத்துக்கு வான் வெளியில் செல்வதாக ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். நான், ஏற்கனவே 1982 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். 32 ஆண்டுகளாக தமிழகத்தில் நான் கால் பதிக்காத இடமில்லை. பட்டிதொட்டியெல்லாம் சென்று எல்லாத் தரப்பு மக்களையும் சந்தித்து வந்துள்ளேன். 1984-ம் ஆண்டுக்குப் பிறகு மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல்களில் மாவட்ட அளவில் பிரசாரம் செய்துள்ளேன்.

    ஏன், ப.சிதம்பரத்துக்காகவும் நான் பிரசாரம் செய்துள்ளேன். அப்போது என் பின்னால் திறந்த ஜீப்பில் ப.சிதம்பரம் வந்ததை மறந்துவிடக் கூடாது. இந்த தேர்தலில் குறைந்த கால அவகாசமே இருப்பதாலும், காவலர் பணிச் சுமைகளை குறைப்பதற்காகவும் நான் இந்த வகையில் பிரசாரம் செய்து வருகிறேன்.

    மேலும், எனக்குள்ள அச்சுறுத்தல்கள் குறித்து ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது அலுவலகத்திலிருந்து எனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது, அதற்கு நான் என்ன பதில் கடிதம் அனுப்பி இருந்தேன் என்பதை ப.சிதம்பரம் மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும். இத்துடன் அவர் இதுபோன்று பேச்சுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai