Enable Javscript for better performance
திமுக திட்டங்களை இனி எந்தக் கட்சியாலும் நிறைவேற்ற முடியாது- Dinamani

சுடச்சுட

  

  திமுக திட்டங்களை இனி எந்தக் கட்சியாலும் நிறைவேற்ற முடியாது

  By dn  |   Published on : 29th March 2014 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  stalin

  திமுக நிறைவேற்றிய திட்டங்களைப்போல இனி எந்தக் கட்சியாலும் நிறைவேற்ற முடியாது என்று உதகையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

  நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

  நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக காணப்படும் எழுச்சியும், ஆரவாரமும், உதயசூரியன் வெற்றி பெற்றுவிட்டது என்பதை கூறும் வகையிலேயே அமைந்துள்ளது. திமுக தேர்தலுக்கு தேர்தல் மட்டும் மக்களை சந்திக்கும் கட்சியில்லை. எப்போதும் மக்களுடனேயே இருக்கும் கட்சி. பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் சிந்தனைதான் திமுகவின் பிரதானம்.

  சுற்றுலாப் பயணிகள்தான் சீசனுக்கு சீசன் நீலகிரிக்கு வருவர். அதைப்போலத்தான் அதிமுகவும் தேர்தலுக்கு தேர்தல்தான் மக்களைச் சந்திக்கிறது. மக்களை வீதிகளில் நேரடியாகச் சென்று சந்திப்பதுதான் திமுக. ஆனால், மற்றவர்கள் மக்களை நேரடியாக சந்திக்க துணிவில்லாமல் உள்ளனர். காவல் துறையினர் மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதை விட்டுவிட்டு மற்ற பணிகளில் ஈடுபடுóவதால்தான் கொலை, கொள்ளை தமிழகத்தில் அதிகரித்துவிட்டது.

  மத்தியில் மதச்சார்பற்ற சிறப்பான ஆட்சி அமையவும், கருணாநிதி சுட்டிக்காட்டுபவரே பிரதமராகவும் வேண்டுமெனில் நீங்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். இதன்மூலமாக ஜெயலலிதாவின் ஆட்சிக்கும் பாடம் புகட்டவேண்டும். கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்தவர். ஏழை, எளிய மக்களின் நலனுக்காகவே சிந்தித்தவர். கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை திமுக நிறைவேற்றிய திட்டங்களைப்போல இனி எந்தக் கட்சியாலும் நிறைவேற்ற முடியாது. புதிதாக ஒருவர் பிறந்துதான் வரவேண்டும்.

  ஆ.ராசா நீலகிரி மக்களவை உறுப்பினராக இருந்தபோது ஹெச்பிஎஃப் மேம்பாட்டிற்காக ரூ. 302 கோடிக்கு அனுமதி பெற்று முதல்கட்டமாக ரூ. 30 கோடியைப் பெறக் காரணமாக இருந்தார். குடநாடு கூட்டு குடிநீர் திட்டம், தோட்டத் தொழிலாளருக்கு குறைந்தபட்சக் கூலி, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, வெளிப்புறப் படப்பிடிப்புக் கட்டண குறைப்பு, இலவச வீட்டு மனைத்திட்டம் உள்ளிட்டவை திமுக ஆட்சியின்போது நீலகிரிக்கு நிறைவேற்றப்பட்ட சில திட்டங்களாகும். ஜெயலலிதா, தான் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்றார்.

  ஆனால், தற்போது தமிழகத்தில் மின்சாரமே இல்லாத நிலையே காணப்படுகிறது. போக்குவரத்துக் கழகங்கள் பொதுமக்களுக்கான கழகங்கள் என்றாலும், இந்த ஆட்சியில்தான் பஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

  அதேபோல, எந்த அறிவிப்பானாலும் ஜனநாயக முறையில் இல்லாமல் 110 விதியின்கீழேயே நிறைவேற்றும் ஜெயலலிதாவின் செயல்கள் கண்டிக்கத்தக்கவை.

  நீலகிரி மக்களிடம் ஆ.ராசாவை கருணாநிதி வேட்பாளராக மட்டும் நிறுத்தவில்லை. அவரை ஒப்படைத்துள்ளார்.

  எனவே, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு வரும் கூட்டம் கூட்டப்படும் கூட்டம். ஆனால், திமுகவுக்கு வரும் கூட்டம் உணர்ச்சிப் பூர்வமான கூட்டம், திமுக எதையும் ஆதாரப்பூர்வமாக பேசும் கட்சி என்பதால் சலசலப்புகளுக்கு அஞ்சாத பனங்காட்டு நரி என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai