Enable Javscript for better performance
நட்சத்திரப் பேச்சாளருக்கு ஒரு வாகனம் மட்டுமே அனுமதி- Dinamani

சுடச்சுட

    
    praveen_kumar

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளருக்கு அவர் பயணம் செய்யும் ஒரு வாகனத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மேலும், நட்சத்திர பேச்சாளர்களின் பெயரில்தான் அந்த அனுமதிச் சீட்டு தரப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    இது குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

    மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களின் பிரசார பயணச் செலவில் சலுகை வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்றால் அந்தக் கட்சியைச் சேர்ந்த 40 பேருக்கும், அங்கீகாரம் இல்லாத கட்சி எனில் 20 பேருக்கும் அளிக்கப்படுகிறது.

    இந்தச் சலுகையைப் பெற்றிருந்தால் கட்சித் தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களின் பிரசார பயணச் செலவுகள் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் கணக்கில் சேராது.

    அனுமதி எங்கு பெறுவது? பிரசார பயணச் சலுகையைப் பெற தேர்தல் ஆணையம் அல்லது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் சனிக்கிழமை (மார்ச் 29) முதல் ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் பெயர்ப் பட்டியலை அளிக்க வேண்டும். பயணச் சலுகை பெறுவதற்கான அனுமதிச் சீட்டு, நட்சத்திர பேச்சாளரின் பெயரில்தான் வழங்கப்படும்.

    அவர் பயணம் செய்யும் வாகனத்துக்கு வழங்கப்படாது. இதன் மூலம், அந்த வாகனத்தை மற்றவர்கள் பயன்படுத்தி சலுகை பெறுவது தடுக்கப்படும்.

    நட்சத்திர பேச்சாளர் பயன்படுத்தும் வாகனத்தில் மைக் அல்லது ஸ்பீக்கர் வைக்கப்பட்டிருந்தால் அதற்கான அனுமதியை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பெற வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

     

    மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி கோரி வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

    மாற்றுத்திறனாளிகள் எளிமையாக வாக்களிக்க வசதிகள் செய்யக் கோரிய வழக்கில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    தேர்தலின்போது மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்குப்பதிவு செய்வதற்கு ஏற்ப வாக்குச் சாவடிகளில் சாய்வு தளம், தனி வரிசை, சக்கர நாற்காலி, பார்வையற்றோருக்கான பிரெய்லி வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என வழக்குரைஞர் எஸ்.முத்துக்குமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏப்ரல் 2-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு

    வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai