சுடச்சுட

    

    தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்; எனவே அது பற்றி கவலைப்பட வேண்டாம் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

    மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து வெள்ளிக்கிழமை உள்சுற்றுவட்டச் சாலைப் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியது:

    2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் நடைபெற்ற குடும்ப ஆட்சியை அகற்ற உங்களைச் சந்தித்து கோரிக்கை வைத்தேன். அதை நீங்கள் நிறைவேற்றினீர்கள். என்னைத் தமிழக முதல்வராக்கினீர்கள். தற்போது மத்தியில் மக்கள் விரோத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அகற்ற வேண்டும் என உங்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க வந்துள்ளேன். இதையும் நீங்கள் நிறைவேற்றி தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

    இந்த தேர்தலில், மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களாட்சியை மலரச் செய்ய வேண்டும். (செய்வீர்களா என அவர் கேட்க, மக்கள் செய்வோம் என குரல் எழுப்பினர்). அதை உங்களால்தான் செய்ய

    முடியும்.

    மத்தியில் மக்களாட்சி மலர்ந்தால்தான், அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி மலர்ந்தால் தான் தமிழக மக்கள் வாழ்வு வளம் பெரும். எனவே, அதிமுக வேட்பாளர்கள் அனைவரையும் மகத்தான வெற்றிப்பெறச் செய்ய வேண்டும். மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்த அரசு என் தலைமையிலான அரசு. 33 மாதங்களில் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை அளித்துள்ளேன். இன்னும் மக்களுக்கு அளித்து வருகிறேன்.

    மின் உற்பத்தியில் நான் எடுத்துவரும் பகீரத முயற்சியால் 2,500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வெளி மாநிலங்களிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. நீண்டகால அடிப்படையில் 3,300 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த மின்சாரமும் விரைவில் கிடைக்கும்.

    சில இடங்களில் மின் உற்பத்தி பிரச்னையால், ஓரிரு நாள்கள் தமிழகத்தில் சில மணிநேரம் மின்வெட்டு இருந்தது. அந்த மின்வெட்டும் விரைந்து சரிசெய்யப்பட்டுள்ளது. இதை சில அரசியல் கட்சிகள் தீவிர மின்சார வெட்டு ஏற்பட்டுள்ளது போன்று விமர்சனம் செய்து பேசினர். தற்போது அனைத்து மின் நிலையங்களும் நல்ல முறையில் இயங்கி வருகின்றன.

    நான் மின்சாரப் பிரச்னையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மின்சாரத்தைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும்.

    திமுக தலைவர் கருணாநிதியும், ப.சிதம்பரமும் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவதில் கைதேர்ந்தவர்கள். அவர்களை நாட்டு மக்கள் நம்பக் கூடாது. தூத்துக்குடியில் நான் பேசியபோது, அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு வருமான வரி விலக்கு நடைமுறையில் இருப்பதை விளக்கமாக கூறியிருந்தேன். இதை திரித்துக் கூறி, இதற்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டிருப்பதாகவும், ஏமாற்று வேலை என்றும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற ஏமாற்று வேலை கருணாநிதிக்குத்தான் தெரியும்.

    இப்போதும் விளக்கமாகக் கூறுகிறேன். அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும்போது பெறும் பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, ஓய்வுபெறுவதற்கு முனகூட்டியே பெறப்படும் தொகை, விடுமுறைகளில் மீதமுள்ள நாள்களுக்கு பெறும் ஊதியம் போன்றவற்றுக்கு முழுமையான வரிவிலக்கு எவ்வித உச்சவரம்பும் இன்றி நடைமுறையில் இருக்கிறது. இதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் கருணாநிதி கூறியிருக்கிறார். அவர்களது தேர்தல் அறிக்கையைத் தயாரித்தவர்களும் இதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அந்த அறிக்கையைத் தான் திருத்தம் செய்ததாகக் கருணாநிதி கூறியிருக்கிறார். அப்படி என்ன விவரம் அறிந்து திருத்தம் செய்தார் என்பது கருணாநிதிக்குத்தான் வெளிச்சம். இதுபோன்ற பொய்யான தகவல்களை மக்களுக்கு கூறுவதை கருணாநிதி வாடிக்கையாக கொண்டுள்ளார். இப்படிப்பட்ட மக்கள் விரோத திமுகவுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai