சுடச்சுட

  

  வாகனச் சோதனையின் போது பதுக்கப்பட்ட பணத்தில் மேலும் ரூ.2 லட்சம் மீட்பு

  By dn  |   Published on : 29th March 2014 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாகனச் சோதனையின் போது சிக்கிய பணம் பதுக்கப்பட்டதில், மேலும் ரூ.2 லட்சத்தை சேலம் வீராணம் காவல் நிலையத்தில் இருந்து மேற்கு மண்டல ஐ.ஜி. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் மீட்டார்.

  சேலம் மாவட்டம், வீராணம் காவல் நிலையத்துக்குள்பட்ட குப்பனூரில் கடந்த 24-ஆம் தேதி வாகனச் சோதனை நடத்திய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கோவிந்தன், சுப்பிரமணி ஆகியோர், கூலித் தொழிலாளர்களுக்கு பணம் எடுத்துச் சென்ற குப்புசாமியிடம் இருந்து ரூ.35 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

  அதில், ரூ.8.25 லட்சத்தை எடுத்து தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர்கள், மீதி ரூ.26.75 லட்சத்தை மட்டும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த தகவல் வெளியானதை அடுத்து, டி.ஐ.ஜி. (பொறுப்பு) ஏ.அமல்ராஜ், எஸ்.பி. சக்திவேல் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரடி ஆய்வு நடத்தினர்.

  அப்போது காவல் நிலையத்துக்குள் ரூ.4 லட்சம் ரொக்கம் இருப்பது தெரிய வந்தது. பணத்தைத் திருடி, பதுக்கி வைத்திருந்ததாக சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர்கள் கோவிந்தன், சுப்பிரமணி இருவரும் கைது செய்யப்பட்டனர். மீதித் தொகை ரூ.4.25 லட்சம் எங்கே சென்றது என்று போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

  இந்த நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜி. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், சம்பந்தப்பட்ட வீராணம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஏற்கெனவே பணம் பறிமுதல் செய்யப்பட்ட அறையில் மேலும் ரூ.2 லட்சம் ரொக்கம் இருப்பதை அவர் கண்டறிந்தார்.

  கடந்த 24-ஆம் தேதி விடிய விடிய காவல் நிலையம் முழுவதிலும் சோதனை நடத்தப்பட்ட போதிலும் ரூ.4 லட்சத்தைத் தவிர வேறு பணம் சிக்கவில்லை. இந்த நிலையில், திருட்டில் தொடர்புடைய வேறு போலீஸார், பணத்தை திருப்பிக் கொண்டு வந்து போட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

  இதையடுத்து, பணத்தைப் போட்டுச் சென்றது யார் என்பது குறித்தும், மீதமுள்ள ரூ.2.25 லட்சம் யாரிடம் உள்ளது என்பதைக் கண்டறியவும் 5 ஆய்வாளர்களைக் கொண்ட தனிப்படை அமைக்க ஐ.ஜி. உத்தரவிட்டார்.

  பணம் திருடிய வழக்கில் வேறு யார், யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரிப்பதற்காக, சிறையில் உள்ள 2 சிறப்பு உதவி ஆய்வாளர்களும் விரைவில் போலீஸ் காவலில் எடுக்கப்படுகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தொகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாக எஸ்.பி. சக்திவேல் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai