வெளிநாடுகளில் இருந்து நிதி: காங்கிரஸ், பாஜக மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
By dn | Published on : 29th March 2014 12:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பிரிட்டனைச் சேர்ந்த வேதாந்தா குழுமத்திடம் இருந்து நிதி பெற்றதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ், பாஜக மீது நடவடிக்கை எடுக்குமாறு தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இரு கட்சிகள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 6 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வேதாந்தா குழுமத்திடம் இருந்து பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் நிதி பெற்றதை தனது பதிலில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.
இதேபோல், மத்திய அரசின் முன்னாள் செயலர் ஈ.ஏ.எஸ்.சர்மா என்பவர் தாக்கல் செய்த மனுவில், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவற்றை மீறி வேதாந்தா குழும துணை நிறுவனங்களான ஸ்டெர்லைட், சேசா கோவா, மால்கோ ஆகிய நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பணம் பெற்றுள்ளன.
வேதாந்தா குழுமத்தின் 2012ஆம் ஆண்டு அறிக்கையின்படி, தேர்தலை முன்னிட்டு இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு 2.01 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 12 கோடி) வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கவேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுக்களை பிப்ரவரி 28ஆம் தேதி, விசாரித்த நீதிபதி பிரதீப் நந்தரஜோக் தலைமையிலான அமர்வு மார்ச் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது. அதன்படி தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.