சுடச்சுட

  

  சர்ச்சைக்குரிய 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ள யுஜிசி முடிவு செய்துள்ளது.

  பொதுநல வழக்கில் கடந்த 2009-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள 126 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க பி.என். டாண்டன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

  இந்தக் குழு பல்கலைக்கழக நிர்வாகம், கற்பித்தல் முறை, மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.

  அதில் 38 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன, 44 பல்கலைக்கழகங்கள் நிலையை சற்று மேம்படுத்திக் கொள்ள வேண்டும்;

  மீதமுள்ள 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என பரிந்துரைத்தது.

  இதில், தமிழகத்தைச் சேர்ந்த 16 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அடங்கும்.

  இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் யுஜிசி-யும் நேரடியாக ஆய்வு செய்ததோடு, மற்றொரு குழுவும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தது.

  இந்நிலையில், சர்ச்சைக்குரிய 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தொடர்பான இந்த குழுக்களின் அறிக்கைகளை ஆய்வு செய்து, அவற்றின் மீது என்ன விதமான நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து மத்திய அரசுக்கு இரண்டு மாதங்களில் ஆலோசனை வழங்க வேண்டும் என யுஜிசி-க்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது. இது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக கடந்த 25, 26, 27-ஆம் தேதிகளில் யுஜிசி கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது.

  இதில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் இப்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டியை மீண்டும் அமைக்க யுஜிசி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் கூறியது:

  நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் குறித்து டாண்டன் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன.

  இந்த 5 ஆண்டுகளில் 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் நிலை மேம்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

  எனவே, அவற்றின் இப்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என யுஜிசி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

  இதன்படி புதிய குழு ஒன்றை அமைத்து 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு, நான்கு மாதங்களில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

  அந்த அறிக்கையின்படி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

  இதற்காக கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்திலும் யுஜிசி மனு தாக்கல் செய்ய உள்ளது என்றார் தேவராஜ்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai