சுடச்சுட

  
  pmk

  சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் பாமக புதிய வேட்பாளராக கே.ஐ. மணிரத்தினம் (55) அறிவிக்கப்பட்டுள்ளார்.

  கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம் நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த வையாபுரி - சின்னப்பொண்ணு ஆகியோரின் மகனான இவர் காங்கிரஸில் இருந்து பாமகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.

  மாநில வன்னியர் சங்கத் தலைவர் குருவை சனிக்கிழமை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

  காங்கிரஸ் கட்சியின் சிதம்பரம் தொகுதி புதிய வேட்பாளராக என்னை நியமிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கூறியிருந்தார். ஆனால் வள்ளல் பெருமான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

  உழைப்பவர்களை காங்கிரஸ் அங்கீகரிப்பதில்லை. மாறியிருப்பார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் மாறவில்லை. கிராம ஏழைகளுக்காகத் தொண்டு செய்ய விரும்பி, கடந்த 4 ஆண்டுகளாக இப்பகுதி ஏழை எளிய மக்களுக்காகச் சேவை செய்கிறேன்.

  மேலும் அரசியல் அதிகாரம் இருந்தால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என நினைத்தேன்.

  எனவே பாமக மூலம் இந்த சேவையைத் தொடரலாம் என நினைத்து அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் என்னை வேட்பாளராகவே நியமித்து விட்டனர். சமூக நல்லிணக்கத்துக்காகப் போராடி வரும் நான் கட்சி, ஜாதி, மதம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்றார்.

  மாநில வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு கூறியது:

  வேட்பாளர் மணிரத்தினம் ஏற்கெனவே இப்பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். இவரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக யாரும் செய்யாத சேவைகளை இவர் செய்வார் என்றார்.

  பாமக அரியலூர் மாவட்டச் செயலர் க. வைத்தி, பாமக மாநிலத் துணைப் பொது செயலர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  வேட்பாளர் விவரம்: எம்.இ.,சிவில் பிஎச்டி., படித்து கட்டுமானத் தொழில் செய்து வரும் இவர் தற்போது காட்டுமன்னார் கோவிலில் வசித்து வருகிறார். இவரது அனுக்கிரஹா அறக்கட்டளை சார்பில் இப்பகுதியில் பல நலத்திட்ட உதவிகளைச் செய்துவருகிறார்.

  இவரது மனைவி சுதா மணிரத்தினம் நாட்டார்மங்கலம் ஊராட்சித் தலைவராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். கடந்து மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து இப்பகுதியின் காங்கிரஸ் வேட்பாளராகவே செயல்பட்டு வந்தார். இப்பகுதியில் தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ளும் வகையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களை காங்கிரஸில் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த மாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கட்சிப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரை காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.

  இந்நிலையில் தனக்கு காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பு கிடைக்காததால் தனது ஆதரவாளர்களுடன் பாமகவில் இணைந்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai