Enable Javscript for better performance
சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை: ராமநாதபுரத்தில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு- Dinamani

சுடச்சுட

  

  சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை: ராமநாதபுரத்தில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

  By dn  |   Published on : 30th March 2014 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேது சமுத்திர திட்டத்தால் தமிழக மக்களுக்கு எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

  ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அ.அன்வர்ராஜாவை ஆதரித்து, ராமநாதபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் முதல்வர் ஜெயலலிதா பேசியது..

  சேது சமுத்திரத் திட்டம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய ஒரு திட்டம். மத்திய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ஆர்.கே.பச்சௌரி குழு தனது ஆய்வு அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் பொருளாதாரமும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். எனவே, இத் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமற்றது எனக் குறிப்பிட்டது. ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற முயன்றது. இத் திட்டத்தை முதலில் நான் ஆதரித்தேன் என்றும் பிறகு எதிர்த்தேன் என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறுகிறார். சேது சமுத்திரத் திட்டத்தை முதலில் ஆதரித்தேன் என்பது உண்மைதான். 1994இல் இதற்கான திட்ட அறிக்கையை தமிழ்நாடு போக்குவரத்துக் கழக மேலாண்மைக் கழகத்திடம் தயாரிக்கச் சொன்னேன். அந்த அறிக்கை 1996இல் சமர்ப்பிக்கப்பட்டபோது கடலில் கப்பல்கள் செல்வதற்காக 12 மீட்டர் மட்டும் அதிகபட்சமாக தோண்ட முடியும் என்றது.

  காங்கிரஸ் அரசோ மாநில அரசின் தடையில்லா சான்றிதழைக் கூட பெறாமல் இத் திட்டத்தின் அகழாய்வுப் பணியைத் துவக்கியது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் ஒரு குழுவை அமைத்து இருந்தது. அந்தக் குழு இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதாக இருந்தால் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் எச்சரித்திருந்தது. நீரி அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகளும் இத் திட்டத்தை நிறைவேற்றுவதில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன என சுட்டிக் காட்டியிருந்தன. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிய பிறகு போக்குவரத்து நடைபெறும் காலத்தில் ஏற்படும் பாதிப்புகள், எண்ணெய் சிந்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள்

  அகழ்வுப் பணியைச் செய்யும்போது ஏற்படும் மண் சரிவுகள் ஆகியனவற்றையும் கருத்தில் கொள்ளாமல் அகழ்வுப் பணியை மத்திய காங்கிரஸ் அரசு துவக்கியது.

  இதன் காரணமாக மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள வலைகள் சேதமடைந்தன. பவளப்பாறைகள், கடல் வளங்கள் அனைத்தும் சேதமடைந்தன. மீன்கள் கிடைப்பதே அரிது என்ற நிலை ஏற்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதித்தது. இறால் மீன் கிடைப்பதே அரிது என்ற நிலை ஏற்பட்டது. அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் பலவும் இடம் பெயர்ந்தன. கடந்த 2011-2012 ஆம் ஆண்டில் தூத்துக்குடிக்கு வந்து சென்ற கப்பல்களின் எண்ணிக்கை 1492.

  இது 2012-2013 ஆம் ஆண்டில் 1294 ஆக குறைந்துவிட்டது. பெரிய கப்பல்களின் வருகை காரணமாக சிறிய கப்பல்களின் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது. சேது சமுத்திரத் திட்டத்தில் 20 ஆயிரம் டன் எடையுள்ள கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும். 30 ஆயிரம் டன் எடையுள்ள கப்பல்களும் செல்ல முடியும் என்பது வடிகட்டிய பொய். பெரிய கப்பல்களும் இத் திட்டத்தின் பாதை வழியாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வர முடியும் என்பதும் வடிகட்டிய பொய்.

  சிறிய கப்பல்கள் மட்டும் பயணிக்க கூடிய இத் திட்டத்தில் கப்பல்கள் செல்லும் ஒவ்வொரு நேரமும் மண் அரிப்பு ஏற்படும். இந்த மண் அரிப்புகளைப் பராமரிக்க தனியாக ஒரு குழுவையும் அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

  அப்பாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் இத் திட்டத்திற்கு இதுவரை ரூ.830 கோடி வரை வீணடிக்கப்பட்டுள்ளது.

  மீன் வளத்தையும், சுற்றுச்சூழலையும், பொருளாதாரத்தையும் சேது சமுத்திரத் திட்டம் பாதிக்கும். தமிழக மக்களுக்கு இத் திட்டத்தால் எந்த வகையிலும் பயன் இல்லை. எனவேதான், எனது தலைமையிலான அரசு இத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. மாநில அரசால் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியாது.

  மீனவர்கள் பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை, நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு போன்றவற்றுக்கு மத்திய அரசால் மட்டுமே தீர்வு காண முடியும். மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக தனக்கு வேண்டிய இலாகாக்களை மட்டும் கேட்டுப் பெற்றதில் காட்டிய ஆர்வத்தை, மீனவர்கள் பிரச்னையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ. 2 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்படுத்தி, இந்திய நாட்டின் கஜானாவையே சுரண்டியது திமுக.

  கச்சத்தீவை மீட்க உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடர்ந்தோம். ஆனால், மத்திய காங்கிரஸ் அரசோ கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது அல்ல என்று எதிர்மனு தாக்கல் செய்தது. நடைபெறவுள்ள தேர்தல் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றி அமைக்கப் போகும் தேர்தல். குடும்ப ஆட்சியை, ஊழல் ஆட்சியை, மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எறிய வாய்ப்பு கிடைத்திருக்கும் தேர்தல். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை சூறையாடிய மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும்.

  பரமக்குடி வைகையாற்றின் வலது கரையில் தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக துணை ஓடுபாதை ரூ.6.5 கோடியிலும், பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் 7 புதிய பாடப்பிரிவுகள் துவங்கவும், உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும்

  ரூ.4.67 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5.19 லட்சம் மதிப்பில் ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் சாலையில் ராமநாதபுரம் மற்றும் உச்சிப்புளியில் இரு மேம்பாலங்கள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பரமக்குடி நகராட்சியில் ரூ.7.15 கோடி நிதி ஒதுக்கி 520 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு, இதுவரை 113 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,493 பண்ணைக்குட்டைகள் அமைக்க முடிவு செய்து இதுவரை 1,500 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

  ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் எனது ஆட்சிக் காலத்தில்தான் வடிவமைக்கப்பட்டு, பின்னர் நிறைவேற்றப்பட்டது.

  பெட்ரோலியப் பொருள்கள், ரசாயனம், உரம் ஆகியனவற்றில் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் அமைய, தமிழை ஆட்சி மொழியாக்கிட, வல்லரசு நாடுகளுக்கு இணையாக நம் நாட்டின் படைகளை நவீனமயமாக்க, வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க, காங்கிரஸ் அரசில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் ஜெயலலிதா.

   

  எது தலையாய பிரச்னை?

   

  இப்போதுள்ள பிரச்னைகளில் தலையாய பிரச்னை தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையாகும் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

  ராமநாதபுரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

  இப்பிரச்னைக்கு சிறிதும் நடவடிக்கை எடுக்காத அரசாக மத்திய அரசு இருந்தது. தமிழக மீனவர்களின் நலனுக்கு எதிராகவே மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க 2-ஆவது கட்ட பேச்சுவார்த்தை இம்மாதம் 25 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அனைத்து மீனவர்களும் விடுவிக்கப்பட்டால்தான் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என நிபந்தனை விதித்திருந்தேன்.

  இந்த நிலையில், இலங்கை அரசு மேலும் சில மீனவர்களை சிறைப்பிடித்தது. அதனால் 2-ஆவது கட்ட பேச்சுவார்த்தையை நடத்தவில்லை. சிறை பிடித்துள்ள மீனவர்களை விடுவிக்க தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக வெள்ளிக்கிழமை 77 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். மீதம் உள்ள இலங்கை சிறையிலிருக்கும் 71 மீனவர்களையும் விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மீனவர்களையும் விடுவித்த பிறகு இருநாட்டு மீனவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai