சுடச்சுட

  

  சேது திட்டத்தை நிறைவேற்றப் பாடுபடுவோம்: இந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை

  By dn  |   Published on : 30th March 2014 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cpi

  சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

  சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத்துக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், துணைச் செயலாளர் சி.மகேந்திரன், மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

  அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: தென்னக நதிகளை இணைப்பது சாத்தியம் என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய நீர்வளத்துறை ஆய்வு செய்து அறிவித்தது. உச்சநீதிமன்றமும் விரைந்து நிறைவேற்ற ஆணையிட்டது. குடிநீர், பாசனத் தட்டுப்பாட்டை நீக்க வேறு வழியில்லை என்று தெரிந்தும் மத்தியில் ஆண்ட எந்தக் கட்சியும் இதில் அக்கறை காட்டவில்லை. இந்த நிலையை மாற்றுவோம்.

  பிரம்மபுத்திரா, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை வரை நதிகளைக் கால்வாய் மூலம் இணைத்து தமிழகத்தின் நீர்த் தேவையை நிறைவு செய்வோம். மாநிலத்துக்குள்ளும் நதிகளை இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம்.

  ஊழலை ஒழிக்கும் லோக் ஆயுக்த சட்டம், தமிழகத்தில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்தச் சட்டத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தென்தமிழகம் மேம்பாடு அடையும். எனவே இந்தத் திட்டம் தேவை. இதை நிறைவேற்ற தடையாகவுள்ள இடையூறுகளை நீக்கி, திட்டம் வெற்றி பெற கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும்.

  தமிழகத்தில் உள்ள சிறு, குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாப்போம். மிகை மின்சாரம் உற்பத்தியாகும் வரை, இருக்கும் மின்சாரம் முழுவதையும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் சமமாக பகிர்வோம்.

  அரசு பணியாளர் பதவி உயர்வு தகுதிக்கான தேர்வு எழுதும் வயது வரம்பை 50 வயது வரை எழுதலாம் என்று மாற்றுவோம். காண்ட்ராக்ட், கேஷுவல் என தினக் கூலிகளாய் வாழ்நாள் முழுவதும் பணியாற்றும் அவலத்தை மாற்றுவோம். 10 ஆயிரத்துக்கு குறையாத சம்பளமும், 58 வயதானவருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமும் கிடைக்கச் செய்வோம். போனஸ், பணிக்கொடை உச்சவரம்புகளை உயர்த்துவோம்.

  கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் ஒப்பந்த முறையில் நியமிக்கப்படுவது ரத்து செய்யப்பட்டு, பணி நிரந்தரம் செய்யப்படும்.

  இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையில் மகளிருக்கு 33 சதவீதமும், உள்ளாட்சிகளில் 50 சதவீதமும் இடஒதுக்கீடு தர நடவடிக்கை எடுப்போம் என்பன உள்ளிட்டவை தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

   

  மோடி அலை வீசவில்லை: தா.பாண்டியன்

  மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியின் அலை வீசவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.

  சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

   

  கேள்வி: நரேந்திரமோடி அலை வீசுகிறதா?

  பதில்: மோடியின் அலை வீசவில்லை. அவர் பிரதமர் பதவிக்கு அலைவதைத்தான் பார்க்க முடிகிறது.

   

  கே: முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் ஆக முடியுமா?

  ப: தமிழகம் முழுவதிலும் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றாலும், ஒருவரால் பிரதமராக முடியாது. பிரதமராவதற்கு 272 தொகுதிகளுக்கு மேல் தேவை.

   

  கே: ஊழலைத் தடுக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என்று விஜயகாந்த் கூறியுள்ளாரே?

  ப: அதை நம்பாமல்தான் விஜயகாந்த் தம்பியும் அவர் மனைவியும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

   

  கே: தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை ஆதரிப்பீர்களா?

  ப: கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அரசியல் நிலவரங்களை முழுமையாக உற்றுக் கவனித்து வருகிறது. தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழலுக்கேற்ப முடிவு எடுக்கும்.

   

  கே: கம்யூனிஸ்ட் கட்சிகள் தாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் எந்தக் கட்சியை ஆதரிக்கும்?

  ப: வேட்பு மனு தாக்கலுக்குப் பின் ஆதரவு கோரும் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக அல்லாத மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கட்சிகளையும் வேட்பாளர்களையும் பரிசீலித்து எங்கள் ஆதரவை அறிவிப்போம் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai