Enable Javscript for better performance
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை: மு.க.ஸ்டாலின்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

    திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனுப்பர்பாளையம், மில்லர் பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகில், வெள்ளியங்காடு, காங்கயம் கிராஸ் சாலை, நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

    இதில், அனுப்பர்பாளையத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது:

    கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை ஆட்சி பொறுப்பில் இருந்த கருணாநிதி பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு திருப்பூர் மாவட்டத்தை உருவாக்கிக் கொடுத்தார். ஆனால், 3 ஆண்டுகளாகியும் இன்னும் ஜெயலலிதா ஆட்சியில் இங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டி முடிக்கப்படவில்லை.

    காற்றாலை மின்சாரம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தனியார் காற்றாலை உற்பத்தியாளர்கள் ரூ. 3.12-க்கு அரசுக்கு தர தயாராக இருந்த நிலையில், ரூ. 6.05-க்கு வெளிமாநிலங்களில் இருந்து தனியாரிடம் மின்சாரம் வாங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதற்கு என்ன காரணம்?

    3 மாதம் காலமாக காற்று வீசிய போது, காற்றாலை மின்சாரத்தை வாங்காத காரணத்தால் சுமார் ரூ. 300 கோடி அளவுக்கு காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர்களுக்கு 25 சதவீதம், பித்தளை, செம்புப் பாத்திரத் தொழிலாளர்களுக்கு 33.5 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி, வேலைக்கு திரும்பாமல் உள்ளனர்.

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டு இன்றைக்கு என்ன நிலையில் இருக்கிறது. எங்கு பார்த்தாலும், சங்கிலிப் பறிப்பு, கொள்ளை, கொலை, கற்பழிப்பு என்று இது தான் இந்த ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் உங்களை தேடி வருவோம்.

    திருப்பூர் சாயப்பட்டறை பிரச்னையில் மத்திய அரசிடம் இருந்து மானியம் பெற்றுத்தந்ததில் திமுகவுக்கும் பங்கு உள்ளது. மின்வெட்டுக்கு மத்திய அரசு தான் காரணம். இதற்கு கருணாநிதி சதி செய்கிறார் என முதல்வர் கூறுகிறார். திமுக ஆட்சியில் 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டு, தற்போது 12 முதல் 16 மணி வரை உள்ளது. எனவே, ஜெயலலிதாவுக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

    முஸ்லிம்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் 3.5 சதவீத ஒதுக்கீடு பெற்றுத்தந்தவர் கருணாநிதி. சிறுபான்மையினருக்கு திமுக எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai