சுடச்சுட

    
    nomination

    தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 63 பேர் மனு தாக்கல் செய்தனர்.

    சென்னையில் உள்ள வடசென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 9 பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட 6 பேர் சுயேட்சை வேட்பாளர்கள்.

     

    மயிலாடுதுறையில் மணிசங்கர் ஐயர்: கோவை, மதுரையில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி தொகுதிகளில் போட்டியிட ஆம்-ஆம்தி கட்சியைச் சேர்ந்தவர்களும் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

    மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இது குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சனிக்கிழமை இரவு வெளியிட்ட அறிவிப்பு:

    மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் தொடங்கிய சனிக்கிழமையன்று 63 பேர் மனுக்களை அளித்தனர். ஆலந்தூர் சட்டப் பேரவைக்கான இடைத் தேர்தலில் போட்டியிட யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

     

    மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள்: கோவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட பி.ஆர்.நடராஜனும், அந்தக் கட்சியின் மாற்று வேட்பாளராக டி.சந்திரனும் மனுதாக்கல் செய்தனர்.

    இதேபோன்று, மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட டி.விக்ரமனும் அந்தக் கட்சியின் மாற்று வேட்பாளராக சி.ராமகிருஷ்ணனும் மனு தாக்கல் செய்தனர்.

     

    ஆம்-ஆத்மி ஆர்வம்-கன்னியாகுமரியில் உதயகுமார்: தென் மாவட்டங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட உள்ள ஆம்-ஆத்மி கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது மனுக்களை சனிக்கிழமை தாக்கல் செய்தனர். தூத்துக்குடி தொகுதியில் எம்.புஷ்பராயனும், திருநெல்வேலியில் எம்.ஜேசுராஜும், அவருக்கு மாற்று வேட்பாளராக ஏ.ஜெபஸ்டினும் மனு தாக்கல் செய்தனர்.

    கூடங்குளம் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய எஸ்.பி.உதயகுமார், ஆம்-ஆத்மி கட்சி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மனு செய்தார்.

     

    திருநங்கை போட்டி: மதுரை தொகுதியில் போட்டியிட சுயேச்சையாகப் போட்டியிட பாரதி கண்ணம்மா என்கிற திருநங்கை மனுதாக்கல் செய்துள்ளார். மேலும், பல்வேறு தேர்தல்களில் போட்டியிட நூற்றுக்கணக்கான முறை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள கே.பத்மராஜன், தருமபுரி தொகுதியில் போட்டியிட மனு செய்தார். மொத்தமாக, 39 தொகுதிகளிலும் 63 பேர் சனிக்கிழமையன்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

     

    இன்றும் நாளையும் மனு தாக்கல் இல்லை

     

    ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதாலும், திங்கள்கிழமை (மார்ச் 31) தெலுங்கு வருடப் பிறப்பு என்பதாலும் இரண்டு நாள்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியாது. மனு தாக்கல் மீண்டும் செவ்வாய்க்கிழமையிலிருந்து (ஏப்ரல் 1) இருந்து தொடங்குகிறது.

    வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஏப்ரல் 5-ஆம் தேதி கடைசியாகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 9 கடைசி நாளாகும். வாக்குப் பதிவு ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 16.

     

    சென்னையில் 9 பேர் வேட்பு மனு தாக்கல்

     

    மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலின் முதல் நாளான சனிக்கிழமை (மார்ச் 29) சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட 9 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

    தென் சென்னை மக்களவைத் தொகுதியில் டிராஃபிக் ராமசாமி சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

    மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் சனிக்கிழமை (மார்ச் 29) தொடங்கியது. சென்னை மாவட்டத்தில் உள்ள வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய தொகுதிகளில் வேட்பு மனுக்களை பெற அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    முதல் நாளில் வட சென்னையில் 2 பேரும், தென் சென்னையில் 4 பேரும், மத்திய சென்னையில் 3 பேரும் என 3 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 9 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.

     

    3 இடங்களில் மட்டும்...

    வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்கள் என 6 இடங்களில் தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்களிலேயே உள்ளனர். அதனால், மனுத் தாக்கல் செய்ய அந்தந்தத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும்.

    இதன்படி 3 இடங்களில் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    தொகுதிவாரியாக வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்கள்

    வடசென்னை

    எம். நிஜாமுதீன் - எஸ்.டி.பி.ஐ.

    வி. சிவகுமார் - இந்திய சோஷஸ்ட் ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்)

    தென்சென்னை

    எஸ். கணேசன் - சுயேச்சை

    கே.ஆர். ராமசாமி என்கிற டிராஃபிக் ராமசாமி - சுயேட்சை

    ஜி. தேவதாஸ் - சுயேச்சை

    ஏ. ஜெய்கணேஷ் - சுயேச்சை

    மத்திய சென்னை

    தயா கிருஷ்ணமூர்த்தி - சுயேச்சை

    எஸ்.டி. கிருஷ்ணகுமார் - இந்திய குடியரசு கட்சி

    எஸ். கந்தசாமி - சுயேச்சை

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai