சுடச்சுட

  

  தேர்தல் பணியில் 35,000 கல்லூரி மாணவ-மாணவிகள்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

  By dn  |   Published on : 30th March 2014 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தல் பணியில் கல்லூரி மாணவ-மாணவிகள் 35,000 பேரை ஈடுபடுத்த உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

  வாக்குச்சாவடிகளில் வெப்-காமிரா இயக்குவது, அவற்றை பதிவிறக்கம் செய்வது போன்ற பணிகளை அவர்கள் மேற்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

  மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:

  பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் பணம் கொடுத்து செய்தி வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இது தொடர்பாக ஒரு ஊடக நிறுவனத்தின் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஊடகக் குழு வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யும்.

  அதில், புகார் நிரூபிக்கப்படுவதற்கான ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க பிரஸ் கவுன்சில் (அச்சு ஊடகம்) அல்லது இந்திய ஒளிபரப்பு கவுன்சிலுக்கு (காட்சி ஊடகம்) பரிந்துரை அனுப்பப்படும். ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக முழுப்பக்க அளவில் விளம்பரங்களோ அல்லது அவரை ஆதரித்து செய்திகளோ வந்தால் அதற்கான தொகை சம்பந்தப்பட்ட வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.

  அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் சமூக ஊடகங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் என்னென்ன செய்திகள், விளம்பரங்கள் வருகின்றன என்பவை கண்காணிக்கப்படுகின்றன. அதன்படி, தினசரி 10 காட்சி ஊடகங்களை கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.

  தேர்தல் ஆணையத்தின் கீழ் காவலர்கள்: வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் போலீஸ் அதிகாரிகள் நிலையில் இருந்து காவலர்கள் நிலை வரை அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கீழ் வருகிறார்கள்.

  அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடன் மிகையளவு பணம் ஏதேனும் எடுத்துச் செல்கிறார்களா என்பதை கண்காணிக்கும் பணியும் நடந்து வருகிறது. ஹெலிகாப்டர் உள்பட அனைத்து வகையான வாகனங்களில் செல்லும் அரசியல் கட்சித் தலைவர்களின் வாகனங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.

  முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டாலும், அவர் பிரசாரம் செய்வதற்காக சம்பந்தப்பட்ட தொகுதியில் உள்ள ஒரு இடத்தில் இறங்கிய பிறகு, அவரது ஹெலிகாப்டரில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். ஏற்காடு இடைத் தேர்தலின் போதுகூட, முதல்வர் ஜெயலலிதாவின் வாகனத்தை பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

  35,000 மாணவர்கள்: தமிழகத்தில் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகள் 9 ஆயிரத்து 222 இருப்பதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. பொதுப் பார்வையாளர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்ற பிறகு பதற்றத்துக்குரிய மற்றும் பிரச்னைக்குரிய வாக்குச் சாவடிகளின் முழு விவரங்கள் தெரிய வரும். வாக்குப் பதிவின் போது, 20,000 வாக்குச் சாவடிகளை வெப்-காமிரா மூலமும், 10,000 வாக்குச் சாவடிகளை காமிராக்கள் மூலமும் படம் பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  இதற்காக, 35,000 கல்லூரி மாணவ-மாணவிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். வெப்-காமிரா மூலம் படம் பிடிப்பது, அவற்றை பதிவிறக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பம் தொடர்பான பணிகளை அவர்கள் மேற்கொள்வார்கள்.

  34,000 கேள்விகள்: தமிழக தேர்தல் துறையின் சார்பில், 1950 என்ற எண் கொண்ட மாநில அளவிலான தொலைபேசி வசதி உள்ளது. இதுவரை, இந்த தொலைபேசி எண்ணை 34,000 பேர் தொடர்பு கொண்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் எவ்வாறு பெயர் சேர்ப்பது, வேட்புமனுவின் போது என்னென்ன ஆவணங்களை இணைக்க வேண்டும் என்பது தொடர்பான கேள்விகளை அதிகளவு கேட்டு தொலைபேசிகள் வருகின்றன.

  ரூ.19.72 கோடி பறிமுதல்: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வாகனச் சோதனைகள் மூலம் இதுவரை ரூ.19.72 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், ரூ.13.16 கோடி ரொக்கமும், ரூ.6.56 கோடி மதிப்பிலான ஜவுளி, நகைகளும் அடங்கும்.

  வாக்குச் சாவடியின் இருப்பிடம் குறித்து அறிய எஸ்.எம்.எஸ். வசதி உள்ளது. 94441 23456 என்ற எண்ணுக்கு எபிக் என டைப் செய்து சிறிது இடைவெளி விட்டு வாக்காளர் அடையாள எண்ணை குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

  சிறிது நேரத்தில் உங்கள் வாக்குச் சாவடியின் இருப்பிடத்தை அறிந்து கொள்வதற்கான எஸ்.எம்.எஸ். உங்களுக்கு கிடைக்கும். இந்த வசதியை இதுவரை 99,392 பேர் பயன்படுத்தி உள்ளனர். கோயில்கள், மசூதிகள் உள்பட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரசாரம் எதுவும் மேற்கொள்ளக் கூடாது. அவ்வாறு பிரசாரம் நடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பிரவீண்குமார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அஜய் யாதவ் (தகவல் தொழில்நுட்பம்), சிவஞானம் (தேர்தல் விழிப்புணர்வு பிரிவு) ஆகியோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai