சுடச்சுட

    

    நாஸா சர்வதேச இலக்கியப் போட்டி: மதுரை பள்ளி மாணவியருக்குப் பரிசு

    By dn  |   Published on : 30th March 2014 05:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    prize

    அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா நடத்திய சர்வதேச அளவிலான இலக்கிய ஆய்வுப் போட்டியில் மதுரை சாரதா வித்யாவனம் பெண்கள் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவியர் 3 ஆவது பரிசைப் பெற்றுள்ளனர்.

    அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாஸா பள்ளி மாணவ, மாணவியருக்கு விண்வெளி ஆய்வில் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் போட்டிகளை நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரியில் விண்வெளியில் மனிதர்கள் தங்குவது குறித்த இலக்கிய ஆய்வு கதைப் போட்டியை அறிவித்தது.

    ஆன்லைன் மூலம் இப் போட்டிக்கான கட்டுரை, கதையை மாணவ, மாணவியர் அனுப்பிடவும் கோரப்பட்டிருந்தது. மதுரை சிம்மக்கல்லில் உள்ள ஸ்ரீசாரதா வித்யாவனம் பெண்கள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவியர் (உயிரி கணிதம்) 5 பேர் "சனிக் கிரகத்தில் மக்கள் குடியேறினால்' எனும் பொருளில் கற்பனை கலந்த ஆய்வுப்பூர்வமான கதையை அனுப்பினர்.

    இந்தப் போட்டியில் சர்வதேச அளவில் 30 நாடுகளின் மாணவ, மாணவியர் பங்கேற்ற நிலையில், இந்தியாவிலிருந்து ஆந்திரம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். ஆனால், தமிழகத்திலிருந்து மதுரை சாரதா வித்யாவனம் பள்ளி மாணவியர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், சாரதா பள்ளி மாணவியருக்கு இலக்கிய கற்பனை ஆய்வுக் கதைக்கு சர்வதேச அளவில் 3 ஆம் பரிசு கிடைத்துள்ளது. இதுகுறித்த தகவலை பள்ளி முதல்வர் வி.பிரேமாவுக்கு நாஸா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியுள்ளது.

    இதுகுறித்து பள்ளி முதல்வர் வி.பிரேமா கூறியதாவது: நம் நாட்டிலிருந்து 3 மாநிலங்களில் தமிழக அளவில் சாரதா பள்ளி முதலிடத்தையும், சர்வதேச அளவில் 3 ஆம் இடத்தையும் பெற்றுள்ளது. இப் போட்டியில் மாணவியர் எஸ்.பி.விஷாக நந்தினி, கே.கமலி, பி.திவ்யப்ரியா, எம்.செண்பகம் மற்றும் எஸ்.ஜி.யோகதர்ஷினி ஆகியோர் பங்கேற்று பரிசு பெற்றுள்ளனர் என்றார்.

    பரிசுபெற்ற மாணவியரை பள்ளித் தாளாளர் மற்றும் பள்ளி முதல்வர் வி.பிரேமா ஆகியோர் பாராட்டினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai