சுடச்சுட

    

    வாக்குக்கு பணம்: மொபைல் மூலம் ஆதாரங்களை அனுப்பும் புதிய வசதி

    By dn  |   Published on : 30th March 2014 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    poll_watch1]

    வாக்குக்கு பணம், பரிசுப் பொருள்கள், மது ஆகியவற்றை அளித்தால் அது குறித்து படங்களுடன் மொபைல் போன் வழியாக புகார் அனுப்பும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த வசதியை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சனிக்கிழமை அறிமுகப்படுத்தினார். இந்த வசதியை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து (www.election.tn.gov.in/complaints) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இதே வசதி இணையதளத்திலும் தரப்பட்டுள்ளது.

    இந்த மொபைல் போன் மற்றும் இணையதளம் மூலம் புகார் அளிக்க நான்கு கட்டங்களைத் தாண்ட வேண்டும். இதன் பிறகு அந்தப் புகார் தலைமைத் தேர்தல் அதிகாரியின் சர்வரை சென்று அடையும்.

     

    ஏழு வகையான புகார்கள்: முதல் கட்டமாக எந்த வகையான புகார் என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். வாக்குக்கு பணம் அளிப்பது, பரிசுகள்-கூப்பன், மது, வாகனங்களை அனுமதியின்றி பயன்படுத்துவது, பேனர்கள்-போஸ்டர்களை அனுமதியின்றி ஒட்டுவது, ஆயுதங்களைக் காட்டுவது, பணம் கொடுத்து செய்தி வெளியிடுவது ஆகிய பிரிவுகளில் எந்தவிதமான புகாரைத் தெரிவிக்க நீங்கள் விரும்புகிறீர்களோ அந்தப் பகுதியை க்ளிக் செய்ய வேண்டும்.

    இரண்டாவது கட்டமாக, உங்களிடம் ஆதாரங்களாக உள்ள புகைப்படம் அல்லது விடியோ காட்சியை இணைக்க வேண்டும். மூன்றாவதாக, அதற்கான விளக்கத்தை டைப் செய்ய வேண்டும்.

    நான்காவது கட்டமாக, சம்பவம் நடந்த மாவட்டம், பேரவைத் தொகுதி ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும். பெயர், மொபைல் எண் விருப்பப்பட்டால் தரலாம். இதனை உங்களது மொபைல் அல்லது இணையதளம் வழியாக அனுப்பினால் அது தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் உள்ள சர்வரை சென்றடையும். இதன்பின், அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் அந்தப் புகார் குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்.

     

    நான்கு வழிகளில் தெரிவிக்கலாம்: வாக்குக்கு பணம் அளிப்பது உள்பட தேர்தல் தொடர்பான புகார்களை நான்கு வழிகளில் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இணையதளம், தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் உள்ள தொலைபேசி எண் (1950), ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனியாக தரப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகள், மொபைல்-இணையதள வசதி ஆகிய நான்கு வழிகளின் மூலமாக புகார்களைத் தெரிவிக்கலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் மற்றும் இணை தலைமைத் தேர்தல் அதிகாரி (தகவல் தொழில்நுட்பம்) அஜய் யாதவ் ஆகியோர் கூறினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai