Enable Javscript for better performance
இலங்கைக்கு எதிரான தீர்மானம் புறக்கணிப்பு: மத்திய அரசின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது: ஜி.கே.வாசன்- Dinamani

சுடச்சுட

  

  இலங்கைக்கு எதிரான தீர்மானம் புறக்கணிப்பு: மத்திய அரசின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது: ஜி.கே.வாசன்

  By dn  |   Published on : 31st March 2014 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்திய அரசு புறக்கணித்தது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

  மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் பிரசாரப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடுகள் வெளியீட்டு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  காங்கிரஸ் நிர்வாகிகள் நடிகர் ராஜ்குமார், ஜோதி ராமலிங்கம் ஆகியோர் தயாரித்துள்ள இந்தக் குறுந்தகடுகளை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வெளியிட, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பெற்றுக் கொண்டார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் வாசன் கூறியது:

  ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்திய அரசு புறக்கணித்துள்ளது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இனி வரும் நாள்களில் இலங்கை அரசுக்கு எதிராக மத்திய அரசு உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகப்பெரிய தேசியக் கட்சி என்பதால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

  நல்ல வேட்பாளர்கள் பலர் காங்கிரஸில் உள்ளனர். இந்தத் தேர்தலில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

  சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பொருளாதாரமும் உயரும். தமிழக அரசு தடையாக இருப்பதால் இந்தத் திட்டம் முடங்கியுள்ளது. தமிழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களே காரணம். இதனை மக்களிடம் பிரசாரம் செய்ய இந்தத் தேர்தல் காங்கிரஸூக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

  கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வோம். தமிழக மக்கள் மதச்சார்பின்மை கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள். எம்மதமும் சம்மதம் என்பதைத்தான் மக்கள் விரும்புகின்றனர். மதச்சார்பின்மையுடன் கூடிய நிலையான ஆட்சியையும், தொடர் வளர்ச்சியையும் காங்கிரஸால் மட்டுமே வழங்க முடியும். எனவே, காங்கிரஸூக்கு மக்கள் ஆதரவளிப்பார்கள்.

  அதிமுக, திமுக இரண்டும் கேப்டன் இல்லாத கப்பல்களாக உள்ளன. தேர்தலுக்குப் பிறகு யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை அவர்களால் சொல்ல முடியவில்லை. மத்தியில் ஆட்சியில் அமர்வதற்காக முதல்வர் ஜெயலலிதா சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறார் என்றார் வாசன்.

  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், மாநிலப் பொருளாளர் கோவை தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  "பாடம் எடுக்க வேண்டாம்'

  காங்கிரஸ் மனம் வருந்தினால் தேர்தலுக்குப் பிறகு அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கத் தயார் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் வாசனிடம் கேட்டனர்.

  அதற்கு அவர், ""மதச்சார்பற்ற அரசு அமைக்க முன்வந்தால் காங்கிரஸூக்கு ஆதரவளிப்போம் என்றும் கருணாநிதி கூறியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

  எங்கள் பாதை வெற்றிப் பாதை. இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கட்சி காங்கிரஸ் மட்டுமே.

  எனவே, மதச்சார்பின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க யாரும் எங்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை'' என்று பதிலளித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai