சுடச்சுட

    

    கருணாநிதியிடமிருந்து அழகிரியைப் பிரிக்கமுடியாது: நடிகர் எஸ்.வி.சேகர்

    By dn  |   Published on : 31st March 2014 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மு.க.அழகிரியை கட்சிப் பதவியிலிருந்து நீக்கலாம். ஆனால், கருணாநிதியின் மகன் என்ற நிலையிலிருந்து யாரும் நீக்கமுடியாது என நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.

    மதுரையில் ஞாயிற்றுக்கிழமை மு.க.அழகிரியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகாசியில் நடைபெறும் "மோதி விளையாடு பாப்பா' எனும் எனது நாடகத்தை பார்க்கவருமாறு அழைத்தும், எனது மகனின் திரைப்படம் குறித்து பேசவும் அழகிரியைச் சந்தித்தேன். எனக்கு அவர் நீண்டகால நண்பர். அரசியல் வேறு, நட்பு வேறு என நினைப்பவன் நான். அதனாலேயே எனக்கு நான் சார்ந்த கட்சியில் பிரச்னைகள் ஏற்படும். சமூகக் கடமை செய்ய எனக்குக் கிடைத்த சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பயன்படுத்தினேன்.

    எனது நாடகத்தை முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பாஜகவைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், மு.க.ஸ்டாலின், அழகிரி அனைவருமே பார்க்கவந்துள்ளனர். ஆகவே, கலையை அரசியலாகப் பார்க்கக்கூடாது.

    திமுகவிலிருந்து அழகிரி நீக்கப்பட்டுள்ளார். அவரை தென்மண்டல அமைப்புச் செயலர் பதவியிலிருந்து நீக்கலாம். ஆனால்,

    கருணாநிதியின் மகன், கனிமொழி, மு.க.ஸ்டாலினின் சகோதரர் என்பதிலிருந்து விலக்கமுடியுமா. ஆகவே, ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு அவருக்கு எல்லாம் சரியாகிவிடும்.

    நான் ஜோதிடம் பார்ப்பவன். ஆகவே அழகிரிக்கு இனி வரும் காலம் சிறப்பாகவே இருக்கும். அவருக்கு ஜோதிட கிரகக் கட்டங்கள் இப்போது சரியில்லை. ஆகவே கட்டம்கட்டப்பட்டுள்ளார். ஆனால், ஏப்ரல் 14-க்குப் பிறகு ஜோதிடக் கட்டங்கள் சரியாகி, அவருக்கு கட்டப்பட்ட கட்டங்களும் காணாமல்போய்விடும்.

    ஜோதிடத்தில் அவருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், நான் அவரது நண்பர் எனும் முறையில் இதைக் கூறுகிறேன்.

    அழகிரிக்கு ஆறுதல் கூறத் தேவையில்லை. அவருக்காக அவரது குடும்பத்தினரிடம் சமரசத் தூது செல்வதும் தேவையற்றது. பிரச்னைகள் அதுவாகவே சரியாகிவிடும். என்றாவது சகோதரர்கள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். வரும் தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் பெற்று மோடி பிரதமராவார் என்றார் எஸ்.வி.சேகர்.

    மு.க.அழகிரியுடனான சந்திப்பின்போது, அவரது ஆதரவாளர்கள் முன்னாள் துணைமேயர் மிசா.பாண்டியன், கவுன்சிலர் எம்.எல்.ராஜ், கோபிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai