சுடச்சுட

    

    பொய் வழக்குப் போட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

    By dn  |   Published on : 31st March 2014 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    anbumani

    தருமபுரியில் தன் மீதும், பாமக நிர்வாகிகள் மீதும் பொய் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    தருமபுரி மக்களவைத் தொகுதியில் ஜாதி உணர்வைத் தூண்டும் வகையில் குறுந்தகடுகளை விநியோகம் செய்ததாகக் கூறி என் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாமக நிர்வாகிகள் சரவணன், அரசாங்கம் ஆகியோர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அடிப்படை ஆதாரம் இல்லாமல், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்தப் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

    தருமபுரி தொகுதியின் பொது வேட்பாளரான எனக்கு பெருமளவில் மக்கள் ஆதரவளித்து வருகின்றனர். தருமபுரி முழுவதும் எனக்கு ஆதரவான அலை வீசுகிறது.

    அனைத்து சமுதாய மக்களும் அமைதியாகவும், நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். அப்படி இருந்தால்தான் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னேறும் என்று பிரசாரத்தில் வலியுறுத்தி வருகிறேன்.

    மனித வாழ்நிலை மேம்பாட்டுக் குறியீட்டில் தற்போது 28-ஆவது இடத்தில் இருக்கும் தருமபுரி மாவட்டத்தை முதல் ஐந்து இடங்களுக்குள் கொண்டு வருவேன் என்றும் பிரசாரத்தில் கூறுகிறேன்.

    இதற்கு மாவட்டத்திலுள்ள அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஆளுங்கட்சியினர், தோல்வி பயத்தில் காவல் துறையினரைத் தூண்டிவிட்டு பாமகவினருக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்ய வைத்துள்ளனர்.

    வாக்காளர்களிடையே விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் குறுந்தகடு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அந்தக் குறுந்தகட்டை நான் பார்த்ததும் இல்லை. அப்படி ஒரு குறுந்தகட்டை நான் கொடுக்கவும் இல்லை. கொடுக்கும்படி யாரிடமும் கூறவும் இல்லை.

    இப்படிப்பட்ட சூழலில் நடக்காத ஒரு நிகழ்வுக்காக என் மீதும், பாமக நிர்வாகிகள் மீதும் வேண்டுமென்றே பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    தோல்வி பயத்தால் துவண்டு கிடக்கும் ஆளுங்கட்சியினர், பாமகவினர் மீது வழக்குத் தொடருவதன் மூலம் ஜாதி உணர்வைத் தூண்டி, மலிவான அரசியல் லாபம் தேட முயற்சி செய்கின்றனர்.

    தேர்தல் ஆணையம் உடனடியாக இதில் தலையிட்டு, என் மீதும், பாமக நிர்வாகிகள் மீதும் தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறும்படி ஆணையிட வேண்டும். அதோடு, பொய் வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai