Enable Javscript for better performance
மாற்றப்படுவாரா சி.பி. ராதாகிருஷ்ணன்?- Dinamani

சுடச்சுட

    

    கோவை பா.ஜ.க.வில் நிலவும் உள்கட்சிப் பூசலையும் மீறி, தேர்தல் பணிகளை தேசிய ஜனநாயக கூட்டணியினர் முன்னெடுத்து வருகின்றனர். அதேசமயம், கோவை தொகுதிக்கு புதிய வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று பரப்பப்படும் தகவலால், கோவை பா.ஜ.க.வில் குழப்பம் வலுத்துள்ளது.

    கோவை மக்களவைத் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டது முதலாகவே, கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார் தலைமையில் ஒரு பிரிவினர், வேட்பாளரை மாற்றக் கோரி கட்சி தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

    சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் கோவையில் இருமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அத்துடன் பாஜக மாநிலத் தலைவராகவும் இருந்தவர்; கொங்கு வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால், அவரை வலுவான வேட்பாளராகக் கருதி பாஜக தலைமையிடம் நிறுத்தியுள்ளது.

    ஆனால் அவரை மாற்றிவிட்டு, கடந்த முறை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட்ட அக் கட்சியின் மாநிலச் செயலாளர்களில் ஒருவரான ஜி.கே.செல்வகுமாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

    மக்களவைத் தொகுதி வேட்பாளர் அறிவிப்புக்கு முன் கோவையில் ஜி.கே.செல்வகுமாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கருதி மாநகர் மாவட்ட பாஜக-வினர் பலர் கட்சிப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், மேலிட அறிவுறுத்தலால் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கடைசிநேரத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    என்னதான் வலுவான வேட்பாளராக இருந்தாலும் பிற கட்சிகளின் போட்டியைத் தாண்டி தொகுதியில் வெல்ல சொந்தக் கட்சியினர் அனைவரின் ஆதரவு கட்டாயம் தேவை. அது சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ÷மேலும் அவர் இதுவரை அதிருப்தியாளர்களைச் சந்தித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முயலவில்லை. மாறாக கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து வெற்றிக்கான பாதையை வகுக்க அவர் முயற்சி செய்து வருகிறார்.

    கோவை, சாயிபாபா காலனியில் சனிக்கிழமை சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் மதிமுக, தேமுதிக, பாமக, கொமதேக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் கோவையில் நிலவும் உள்கட்சிப் பூசலையும் தாண்டி வெற்றி பெறுவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கோவையில் வேட்பாளர் மாற்றம் உறுதி என்று அதிருப்தியாளர்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமாரிடம் கேட்டபோது, ""எங்களது கோரிக்கையை தெளிவாக கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளோம். விரைவில் மாற்று வேட்பாளர் அறிவிப்பு வரும்'' என்றார்.

     

    பாதிப்பில்லை: இதுகுறித்து கோவை வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, வேட்பாளர் மாற்றப்படுவார் என்று நீண்ட நாள்களாகவே சொல்லி வருகிறார்கள். இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் எதுவும் பேசலாம். கட்சித் தலைமை எடுத்த முடிவு இது. இப் பிரச்னையால் எங்கள் வெற்றி வாய்ப்பு ஒருபோதும் பாதிப்படையாது. மக்களின் முழு ஆதரவு எங்களுக்கு உள்ளது என்றார்.

    எவ்வாறாயினும் கோவை பாஜக-வினர் இரு பிரிவுகளாகப் பிரிந்து செயல்படுவது, தமிழகத்தில் அக் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் கோவையில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai