சுடச்சுட

  

  சென்னை, மார்ச் 30: தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா யுகாதி தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

  இந்தியாவின் ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றும் வண்ணம், ஜாதி, மத வேறுபாடின்றி பல ஆண்டுகளாக சகோதர, சகோதரிகளாய் தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் மொழியால் வேறுபட்டு இருந்தாலும், தமிழ் மக்களின் இதயத்துடன் இரண்டறக் கலந்து இன்ப, துன்பங்களில் பங்கேற்று நட்புணர்வுடன் பழகி வருகிறார்கள்.

  இவ்வாறு தமிழ் மக்களோடு ஒன்றி, உறவாடி, உவகையுற வாழ்ந்து வரும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும். அனைவருக்கும் யுகாதி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

   

  ஆளுநர் வாழ்த்து: உலகம் முழுவதும் உள்ள தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு ஆளுநர் கே.ரோசய்யா யுகாதி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தெலுங்கு வருடப் பிறப்பு அமைதி, ஒற்றுமை, முன்னேற்றம், நல்லிணக்கம் ஆகியவற்றை வழங்கி நமது நாடு உலக அரங்கில் முன்னேற வழிவகுக்க வேண்டும் என தனது வாழ்த்துச் செய்தியில் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.

   

  தலைவர்கள் வாழ்த்து

   

  திமுக தலைவர் கருணாநிதி: திராவிட மொழிகள் குடும்பத்தில் தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்புடைய தெலுங்கு பேசும் மக்கள் யுகாதி திருநாளை சிறப்போடு கொண்டாடுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

  இந்நாளில் தெலுங்கு பேசும் மக்களின் வாழ்வில் வளமும், நலமும் நிறைய, வலிவும், பொலிவும் சேர நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் வாழும் பிற மொழி பேசும் மக்களுடன் தமிழக மக்கள் கூடி வாழ்வதுபோலவே, தெலுங்கு பேசும் மக்களுடனும் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.

  தமிழ் மக்களின் கவசமாகத் திகழும் திமுக ஆட்சியில்தான் யுகாதி திருநாள் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் அதிமுக அரசால் விடுமுறை ரத்து செய்யப்பட்டது. ஆனால், 2006-ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

   

  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன்: தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்தப் புத்தாண்டு நாடெங்கிலும் எழுச்சியையும், மலர்ச்சியையும் உண்டாக்கி நாடு நலம் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். முக்கிய தருணத்தில் அனைவரும் சிந்திக்கவும், செயல்படவும், முக்கியமான முடிவுகளை எடுக்கவும் இந்தப் புத்தாண்டு வகை செய்யட்டும்.

   

  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டான யுகாதி திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருமே தமிழர்களின் சகோதர, சகோதரிகள்தான். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இவர்கள் பெரும் பங்களித்துள்ளனர். தமிழர்களுக்கும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு இடையே ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

   

  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்: பேசும் மொழியால் வேறுபட்டிருந்தாலும், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரள மாநில மக்கள் கலாசாரம், பண்பாட்டில் ஒருமித்த உணர்வோடு வாழ்ந்து வருகிறோம். தெலுங்கு, கன்னட வருடப் பிறப்பான யுகாதி திருநாளில் அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிட நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai