Enable Javscript for better performance
40 தொகுதிகளிலும் வென்றிட களப் பணியாற்றுங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

  

  40 தொகுதிகளிலும் வென்றிட களப் பணியாற்றுங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

  By dn  |   Published on : 31st March 2014 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jayalalitha

  தமிழகம் மற்றும் புதுவையில் 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இது தொடர்பாக அதிமுகவினருக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை எழுதிய மடல்:

  எம்.ஜி.ஆர். 1972-ஆம் ஆண்டு அதிமுகவைத் தொடங்கிய நாளில் இருந்து, அதிமுக எத்தனையோ நாடாளுமன்றத் தேர்தல்களை சந்தித்திருக்கிறது. ஆனால், கட்சி வரலாற்றில் முதல் முறையாக 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் வாய்ப்பினை இந்தத் தேர்தலில்தான் நாம் பெற்றிருக்கிறோம். எனவே, இது அதிமுகவினருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல்.

  இப்போது லட்சக்கணக்கான அதிமுகவினர் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளில் பணியாற்றுகின்றனர். அதிமுகவின் எளிய தொண்டர்கள், மக்கள் தொண்டாற்றும் உயர் பதவிகளை வகிக்கும் பெருமையை பெற்றிருப்பதைப் போல, அதிமுகவின் சார்பில் 40 மக்களவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர் எனும் வகையில் கட்சியினர் ஒவ்வொருவரும் தங்களது கடமையைச் செய்ய வேண்டும்.

  தமிழக மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், தமிழர்களின் பெருமைகளைச் சீர்குலைக்கும் வகையிலும் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்திக் கொண்டிருந்த அரசு மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு. காங்கிரஸ் கட்சியுடன் 9 ஆண்டு காலம் ஒட்டி உறவாடிய கட்சி திமுக.

  காங்கிரஸ் கூட்டணி அரசு நமது நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் சீர்குலைத்து விட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டது. அனைத்துத் துறைகளிலும் ஊழல் கொடிகட்டி பறக்கிறது.

  இதன் காரணமாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, குஜராத் முதல் அசாம் வரை விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இந்திய நாட்டைக் காப்பாற்றவும், இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் மக்களவைத் தேர்தல் ஒரு கருவியாக நமக்கு வாய்த்திருக்கிறது. இந்தச் செய்தியை தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

  தமிழக வாக்காளர்களை ஒவ்வொரு நாளும் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரிடமும் அதிமுக அரசின் சாதனைகளை, முன்னோடித் திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும்.

  வஞ்சக எண்ணத்தோடு காங்கிரஸூம், குடும்ப சுயநலத்துக்காக திமுகவும் தமிழகத்துக்கு எதிராக இழைத்த பல்வேறு அநீதிகளை, கொடுமைகளை வாக்காளர்கள் உணரும் வகையில் திண்ணைப் பிரசாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள் போன்றவற்றோடு, நேரடிச் சந்திப்புகள் வாயிலாகவும் விளக்கிச் சொல்ல வேண்டும்.

  நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, இளம் வாக்காளர்களைக் கவர வேண்டும். வழக்கமான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதைப் போல, இந்த நேரடித் தொடர்பு பிரசாரமும் மும்முரமாக நடைபெற வேண்டும். தேர்தல் முடியும் வரை ஒவ்வொருவரும் விழிப்போடு களப்பணி ஆற்ற வேண்டும்.

  என்னைப் பொருத்தவரை பொதுவாழ்வும், அரசியல் தொண்டும் பிரார்த்தனை. விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லாத தவம். பலகோடி மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் சுய அர்ப்பணிப்பு. கட்சியினர் அனைவரும் என்னுடைய இந்த உணர்வுகளைப் புரிந்து கொண்டு தேர்தல் பணியாற்ற வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் வகையில் தேர்தல் பணிகளை ஆற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார் ஜெயலலிதா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai