Enable Javscript for better performance
நெல்லை புதுமுக நடிகர் கொலை- Dinamani

சுடச்சுட

    
    suspect

    திருநெல்வேலியைச் சேர்ந்த புதுமுக நடிகர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சூசைமரியான். இவரது மகன் ரொனால்ட் பீட்டர் பிரின்சோ (37). இவர், தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரத்தில் கணினி மையம் நடத்தி வந்தார். திருநெல்வேலியைச் சேர்ந்த நண்பர் உமாசந்திரன் மற்றும் சிலருடன் சேர்ந்து இணையதளம் மூலமும் தொழில் செய்து வந்தார்.

    இதற்கிடையே, ரொனால்ட் பீட்டர் சென்னைக்குச் சென்று, "காகிதபுரம்' என்ற திரைப்படத்தில் நடித்தாராம். அங்கு துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகாவுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

    இந்நிலையில், ரொனால்ட் பீட்டரை காணவில்லை என்று ஸ்ருதி சந்திரலேகா மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ரொனால்ட் பீட்டரின் சகோதரர்

    ஜஸ்டின் பிரின்சோ சென்னைக்குச் சென்று பார்த்தபோது, அவரைக் காணாததால் அவரும் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதற்கிடையே, ரொனால்ட் பீட்டரிடம் கார் டிரைவராக பணி புரிந்த ஜான் பிரின்சன் என்பவரை ஜஸ்டின் பிரின்சோ மதுரை திருமங்கலத்தில் சந்தித்தாராம். அப்போது, ஜான் பிரின்சன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த ஜஸ்டின் பிரின்சோ பாளையங்கோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து, ஜான் பிரின்சனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நடிகர் ரொனால்ட் பீட்டர் கொன்று புதைக்கப்பட்டது தெரியவந்தது. ரொனால்ட் பீட்டரிடம், அவரது நண்பர் உமாசந்திரன் தொழிலில் முதலீடு செய்த தொகையில் இருந்து ரூ.1 லட்சத்தைத் தருமாறு கேட்டாராம். ரொனால்ட் பீட்டர் பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த உமாசந்திரன், துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகா, கார் டிரைவர் ஜான் பிரின்சன் ஆகியோருடன் சேர்ந்து, ரொனால்ட் பீட்டரை கடந்த ஜனவரி 18-ஆம் தேதி சென்னையில் வைத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர், அவரது உடலை உமாசந்திரன் காரில் திருநெல்வேலிக்கு கொண்டு வந்து, தன் நண்பர்களின் உதவியுடன் பாளையங்கோட்டை ஆசீர்வாதபுரம் மைதானத்தில் புதைத்துள்ளார். இதையடுத்து, உமாசந்திரனின் நண்பர்களான பாளையங்கோட்டை சாந்திநகரைச் சேர்ந்த ரபீக் உஸ்மான் (36), காந்திமதிநாதன் என்ற விஜய் (32), பாளையஞ்செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (26) ஆகியோரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

    பின்னர், ரொனால்ட் பீட்டர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை மூவரும் சனிக்கிழமை அடையாளம் காட்டினர். அவரது உடலை ஞாயிற்றுக்கிழமை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். நடிகரின் கார் டிரைவர் ஜான் பிரின்சனிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai