Enable Javscript for better performance
நெல்லையில் நடிகரின் உடல் தோண்டி எடுப்பு- Dinamani

சுடச்சுட

    
    tvl12murder

    சென்னையில் கொலை செய்யப்பட்டு, திருநெல்வேலியில்  புதைக்கப்பட்ட புதுமுக நடிகரின் உடல், திங்கள்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. எலும்புகள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டன.

    திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியைச் சேர்ந்தவர் ரொனால்ட் பீட்டர் பிரின்சோ (37). கணினி மையம், இணையதளத்தில் உணவுப்  பொருள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

    திரைப்படங்கள் எடுக்கவும் நிதியுதவி வழங்கி வந்த ரொனால்ட் பீட்டர், காகிதபுரம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தாராம்.

    நடிகையுடன் தொடர்பு: மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்த ரொனால்ட் பீட்டருக்கும், "சாம்பவி' என்ற திரைப்படத்தில் நடித்த துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

    இந்நிலையில், பீட்டருக்கும், அவரது நண்பரான திருநெல்வேலியைச் சேர்ந்த உமாசந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டதாம். பின்பு உமாசந்திரன், துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகா ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் 18-ஆம் தேதி சென்னையில் வைத்து பீட்டரை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அவரது கார் ஓட்டுநரான பெருமாள்புரத்தைச் சேர்ந்த ஜான்பிரின்சன் உதவியாக இருந்தாராம்.

    பின்னர், சென்னையிலிருந்து பீட்டரின் உடலை பாளையங்கோட்டைக்கு கொண்டு வந்து ஆசீர்வாதபுரத்தில் புதைத்துள்ளனர். இதற்கு பாளையங்கோட்டையை சேர்ந்த ரபீக் உஸ்மான், ஆனஸ்ட்ராஜ், விஜய் ஆகியோர் உதவியதாகக் கூறப்படுகிறது.

    பீட்டரின் சகோதரர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து ரபீக்உஸ்மான், ஆனஸ்ட்ராஜ், விஜய் ஆகியோரை கைது செய்தனர். இவ் வழக்கில் தொடர்புடைய துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகா, உமாசந்திரன் உள்ளிட்டோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    உடல் தோண்டி எடுப்பு: இதற்கிடையே, பீட்டரின் உடல் திங்கள்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது. உடலை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

    எலும்புகள் அனைத்தும் நுண்ணிய பரிசோதனைக்களுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடல் பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    இவ்வழக்கில் நடிகை ஸ்ருதி சந்திரலேகா உள்ளிட்டோரைப் பிடிக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிடிபட்ட பின்னர்தான் வழக்கின் உண்மை நிலை முழுமையாகத் தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai