Enable Javscript for better performance
எழுத்தாளர் கல்கத்தா எஸ்.கிருஷ்ணமூர்த்தி காலமானார்- Dinamani

சுடச்சுட

    
    krishnamurthi

    சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய நூல்களை வங்க மொழியில் மொழிபெயர்த்த எழுத்தாளர் கல்கத்தா எஸ்.கிருஷ்ணமூர்த்தி (84) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

    மறைந்த எஸ்.கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டையில் பிறந்தவர். அங்குள்ள மன்னர் கல்லூரியில் பட்டப்படிப்பையும், நாகபுரி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படிப்பையும் நிறைவு செய்த அவர், சிறிது காலம் மன்னர் கல்லூரியிலேயே உதவி விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.

    பின்னர், சென்னையில் மத்திய தணிக்கை அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து, பதவி உயர்வு காரணமாக கொல்கத்தாவுக்கு மாற்றலாகிச் சென்றார். 32 ஆண்டுகள் கொல்கத்தாவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

    தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்று விளங்கிய இவர், பிரபல வங்கமொழி எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கும் ஆர்வத்துடன் வங்கமொழியைக் கற்றுத் தேர்ந்தார்.

    மிகுந்த துணிவோடும், நம்பிக்கையோடும் சிலப்பதிகாரம், திருக்குறள், பாரதியார் கவிதைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை வங்கமொழியில் மொழிபெயர்த்த பெருமை எஸ்.கிருஷ்ணமூர்த்தியைச் சாரும்.

    பிரபல வங்க இலக்கிய படைப்பாளிகள் பலரது படைப்புகளையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

    இந்திரா பார்த்தசாரதியின் "குருதிப்புனல்' நாவலை வங்கத்தில் மொழிபெயர்த்ததற்காக சிறந்த மொழிபெயர்ப்பு நூலாசிரியர் விருது பெற்றவர். "நான் கடந்து வந்த பாதை' என்ற இவரது சுயசரிதை நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்கம் பாராட்டும், பரிசும் வழங்கிச் சிறப்பித்தது.

    கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட பாரதி தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், செயலாளராகவும் பணியாற்றி வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார். இவர், பாரதி நூற்றாண்டு விழா கொல்கத்தாவில் கொண்டாடப்பட்டபோது நடைபெற்ற பாரதி சிலைத் திறப்பு விழாவில் பங்கேற்ற மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சொற்பொழிவை வங்க மொழியில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர்.

    இவரது மகள் உஷா பஞ்சாபகேசன் சென்னையிலும், மகன் ராதாகிருஷ்ணன் கொல்கத்தாவிலும் வசிக்கின்றனர். எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் இறுதிச் சடங்கு சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள மின் மயானத்தில் திங்கள்கிழமை (செப்.8) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மகள் உஷா பஞ்சாபகேசன் இல்லம் முகவரி: மேற்கு தாம்பரம், 23, ஸ்டேட் பாங்க் காலனி. தொடர்புக்கு 044-22262198, செல் 9884764608.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai