Enable Javscript for better performance
பைக் மீது மோதி தீப்பிடித்த அரசுப் பேருந்து: 58 பயணிகள் உயிர் தப்பினர்- Dinamani

சுடச்சுட

    

    பைக் மீது மோதி தீப்பிடித்த அரசுப் பேருந்து: 58 பயணிகள் உயிர் தப்பினர்

    By dn  |   Published on : 14th September 2014 10:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    fire_bus

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பைக் மீது மோதியதில் அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் இருந்த 58 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    கன்னியாகுமரி மாவட்டம், சின்னகடல் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ரசூல். இவரது மகன் ஜஸ்டின்ராஜ் (29), மனோண்மணி மகன் பிரதீப் (23). இருவரும் கட்டடத் தொழிலாளர்கள். கொடைக்கானலில் தங்கி வேலை செய்து வந்த இவர்கள், பைக்கில் ஊருக்கு வந்தனர்.

    மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி அருகே ஜவுளிப் பூங்கா முன் வந்தபோது, முன் சக்கரத்தின் டயர் பஞ்சரானதால் பைக் விபத்துக்குள்ளானது. இதில், ஜஸ்டின்ராஜ் பலத்த காயமடைந்தார். அவரை, நெடுஞ்சாலை ரோந்துப் போலீஸார் மீட்டு, சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் உட்கார வைத்து விட்டு, விபத்துக்குள்ளான பைக்கை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர்.

    அப்போது, ஈரோட்டில் இருந்து ஏர்வாடி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பைக் மீது மோதி இழுத்துச் சென்றது. தார்ச் சாலையில் பைக் உரசியதில் ஏற்பட்ட தீ, பேருந்தில் பற்றி எரியத் தொடங்கியது. உடனே, பேருந்தில் இருந்த 58 பயணிகளும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர். இதில், உச்சிப்புளியைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி தியாகராஜன் பையில் வைத்திருந்த 6 பவுன் நகை தீயில் கருகியது.

    தகவலறிந்து வந்த சோழவந்தான், நிலக்கோட்டை தீயணைப்பு, மீட்புப்படையினர் பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். எனினும், பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து, வாடிப்பட்டி போலீலார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai