Enable Javscript for better performance
திராவிடர் கழகத்தினர் மீது தாக்குதல்: கருணாநிதி கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    திராவிடர் கழகத்தினர் மீது தாக்குதல்: கருணாநிதி கண்டனம்

    By dn  |   Published on : 17th April 2015 05:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karunanidhi

    திராவிடர் கழகத்தினர் மீது சிவசேனா அமைப்பினர் தாக்குதல் தொடுத்துள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும், அணிந்த பிறகு அதை வேண்டாம் என்று கழற்றிவைத்து விடுவதும் அவரவர் நம்பிக்கை சார்ந்ததாகும்.

    திராவிடர் கழகம் சார்பில் ஏற்கெனவே ஒருமுறை நடைபெற்ற தாலி அகற்றும் நிகழ்ச்சியில் என்னை அவ்வாறு செய்யச் சொன்னபோது, அப்படிச் செய்ய மாட்டேன் என்று அந்த மேடையிலேயே கூறியுள்ளேன். திராவிடர் கழகம் சார்பில் தற்போது அறிவித்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்குக் கூட யாரையும் அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை.

    நிகழ்ச்சி காலை 10 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், 7 மணி அளவில் எளிமையாக நடத்தி முடித்து விட்டனர். ஆனால், இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்களும், சிவசேனா கட்சியினரும் திட்டமிட்டு அத்து மீறி, பெரியார் திடலுக்கு உள்ளேயே புகுந்து தடியடி நடத்தியுள்ளனர். பெரியார் திடல் வரை வந்து கலகம் விளைவித்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காவல்துறையினரின் இந்தச் செயலைத் திமுக கண்டிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

    மார்க்சிஸ்ட் கண்டனம்: இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    சென்னை பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலையில் நடந்து முடிந்துள்ளது.

    ஆனால், சிவசேனை அமைப்பைச் சேர்ந்தோர் மாலையில் பெரியார் திடலுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த திராவிடர் கழகத்தினர் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் தொடுத்துள்ளனர்.

    இந்தத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai