Enable Javscript for better performance
படகில் வரும் இலங்கைத் தமிழர்களை அனுமதிக்கமாட்டோம்- Dinamani

சுடச்சுட

    
    no

    படகு மூலம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்டோரை அனுமதிக்க மாட்டோம் என ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்தார்.

    சென்னையில் இந்திய- ஆஸ்திரேலிய வர்த்தக சபையின் வெள்ளி விழா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் பங்கேற்றுப் பேசினார்.

    நிகழ்ச்சிக்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையே பொருளாதாரம், வர்த்தகம் போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. இந்தப் பயணத்தின்போது, தொழில் முதலீடு குறித்து தமிழக முதல்வரைச் சந்தித்து உரையாடினேன். இந்தச் சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இலங்கைத் தமிழர்கள் ஏராளமானோர் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து, படகு மூலம் சட்டவிரோதமாக வருகின்றனர்.

    இதுபோன்று, சட்ட விரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வரும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியேற அனுமதி அனுமதிக்க மாட்டோம். இதுபோன்று வருவதைத் தமிழர்கள் தவிர்க்க வேண்டும்.

    மறுவாழ்வு: தமிழக முதல்வரிடம், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பாக விவாதித்தேன். இந்த விவகாரத்தில், இந்தியா மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது.

    ஆஸ்திரேலிய மாணவர்கள் இந்தியாவிலும் இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவிலும் கல்வி பயில்வது தொடர்பாக பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    இந்தியாவுக்கு, ஆஸ்திரேலியா யுரேனியம் வழங்குவது குறித்து அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டுள்ளனர். நடப்பாண்டிலேயே இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

    தமிழகத்தில் ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம், நிலக்கரி, மின் உற்பத்தி, விளையாட்டு, கல்வி, மருத்துவம் ஆகியத் துறைகளில் அதிக அளவில் முதலீடு செய்வதற்கு தயாராக உள்ளோம். தமிழகத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் ஆஸ்திரேலியா பங்கேற்கும்.

    இந்திய ராணுவத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியக் கடல் பகுதியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு ஆர்வத்துடன் உள்ளோம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில், இந்திய- ஆஸ்திரேலிய வர்த்தக சபையின் தலைவர் ஜி.ஆர்.கே.ரெட்டி, இரு நாடுகளின் வர்த்தகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai