Enable Javscript for better performance
வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு: தலைமைப் பொறியாளர் ஜாமீன் மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு: தலைமைப் பொறியாளர் ஜாமீன் மனு தள்ளுபடி

    By dn  |   Published on : 17th April 2015 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலியைச் சேர்ந்த வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைதான தலைமைப் பொறியாளரின் ஜாமீன் மனுவை திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

    திருநெல்வேலி வேளாண் துறையில் உதவி செயற்பொறியாளராகப் பணிபுரிந்து வந்தவர் முத்துக்குமாரசாமி. இவர் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் "அக்ரி' கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீஸார் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி சென்னையில் கைது செய்தனர். இதையடுத்து, இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் தலைமைப் பொறியாளர் செந்தில் மட்டும் ஜாமீன் கேட்டு திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 7-ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். மனுவில், முத்துக்குமாரசாமி தற்கொலைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உடல் நலம் பாதிப்பால் அவதிப்பட்டுவரும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு கடந்த 8-ஆம் தேதி நீதிபதி நசீர்அகமது முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்ததால் விசாரணையை 13-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். ஆனால், 13-ஆம் தேதி வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதால் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை 16-ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

    இதன்படி, செந்திலின் ஜாமீன் மனு நீதிபதி நசீர் அகமது முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. செந்தில் சார்பில் வழக்குரைஞர் வெங்கடேஷ்வரமூர்த்தி ஆஜரானார்.

    செந்திலுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் உள்ளிட்டவை இருப்பதால், 2007-ஆம் ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வருவதாகவும், முத்துக்குமாரசாமி மரணத்தால் ஏற்கெனவே மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிறையிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்குரைஞர் சிவலிங்கமுத்து, செந்திலுக்கு பாளையங்கோட்டை மத்திய சிறையில் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக உள்ளது.

    இதற்கான மருத்துவ அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை இன்னும் முடிவடையாமல் முதல் கட்டத்திலேயே உள்ளது. இப்போது ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கப்பட நேரிடும். எனவே, செந்திலுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நசீர் அகமது, பொறியாளர் செந்திலின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து, செந்தில் தரப்பு வழக்குரைஞர்கள் கூறுகையில், அடுத்தகட்டமாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்து ஜாமீன் கோருவோம் என்றனர்.

    மேலும், இந்த வழக்கில் "அக்ரி' கிருஷ்ணமூர்த்தி, செந்தில் ஆகியோரின் நீதிமன்றக் காவல் வெள்ளிக்கிழமையுடன் (ஏப். 17) முடிவடைகிறது. எனவே, இருவரையும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai