Enable Javscript for better performance
செவந்திலிங்கபுரத்தில் அரியவகை அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு- Dinamani

சுடச்சுட

    

    செவந்திலிங்கபுரத்தில் அரியவகை அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு

    By dn  |   Published on : 23rd April 2015 06:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ayanar-stachu

    செவந்திலிங்கபுரத்தில் பழங்கால அரியவகை அய்யனார் சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    இதுவரை கிடைத்த அய்யனார் சிற்பங்களைக் காட்டிலும் இந்தச் சிற்பத்தில் அய்யனாரின் இடுப்பில் குறுவாளுடன் இருப்பது தனித்தன்மையாக கருதப்படுகிறது.

    இதுகுறித்து டாக்டர் மா. ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் கூறியதாவது:

    திருச்சியில் இருந்து முசிறி செல்லும் வழியில் உள்ள செவந்திலிங்கபுரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் அர. அகிலா, பிரிவுச் சாலையின் ஒரு பகுதியில் பாதிக்கும் மேல் மண்ணில் புதைந்திருந்த சிற்பத்தைக் கண்டார். அந்தச் சிற்பம் 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை அய்யனார் சிற்பம். இந்தச் சிற்பத்தில் கல் ஆசனத்தில் வலக்காலைக் கீழே தொங்கவிட்ட நிலையில், இடக்காலை குத்துக்காலாகத் தளத்தில் இருத்தி, உத்தகுடி அமர்வில் உள்ளார் அய்யனார்.

    வலக்கை தளத்தில் இருத்தப்பட்டுள்ளது. இடக்கை இடது முழங்கால் மீது படர்ந்துள்ளது.

    கழுத்தைச் சவடியும் சரப்பளியும் அலங்கரிக்க, மார்பில் முப்புரிநூல் உள்ளது.

    பட்டையான உதரபந்தம் மார்பையும் வயிற்றையும் பிரிக்கிறது.

    முத்துக்கள் பதித்த இடுப்புக் கச்சுடன் சிற்றாடை அணிந்து காட்சிதரும் அய்யனார் இடுப்பின் வலப்புறம் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி பெற்ற குறுவாள் ஒன்று செருகப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தின் அகலம் 78 செ.மீ. கனம் 11 செ.மீ. பல்லவர் காலத்தில் இருந்தே வீரத்தை முன்னிருத்த ஆடவர் சிற்பங்களில் இடுப்பில் இதுபோன்ற அலங்கரிக்கப்பட்ட கைப்பிடியுடனான குறுவாள் காட்டுவது மரபாக இருந்து வந்துள்ளது.

    எனினும், பொதுவாக அய்யனார் சிற்பங்களில் இதுபோன்ற குறுவாள் காட்டப்படுவதில்லை. அந்த வகையில் இந்தச் சிற்பம் சிறப்பு பெறுகிறது என்றார்.

    இந்தச் சிற்பத்துக்கு அருகிலேயே யானைச் சிற்பம் ஒன்றும், பழங்கால அகல் ஒன்றும் கிடைத்துள்ளது.

    இதனால் அய்யனார் வழிபாட்டில் இருந்ததற்கான அடையாளமாக இவற்றைக் கொள்ளலாம் என, பேராசிரியர் நளினி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai