Enable Javscript for better performance
மதுக் கடைகளை மூடக் கோரி போராட்டம்: 4,500 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுக் கடைகளை மூடக் கோரி போராட்டம்: 4,500 பேர் கைது

    Published on : 04th August 2015 09:45 PM  |   அ+அ அ-   |    |  

    தமிழகத்தில் மதுக் கடைகளை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 4,500 பேர் கைது செய்யப்பட்டனர். முழு கடையடைப்பு போராட்டத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

    தமிழகத்தில் முழுமையான மது விலக்குக் கோரி, போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள், கடந்த 31-ஆம் தேதி கன்னியாகுமரி அருகே செல்லிடப்பேசியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டபோது திடீரென இறந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் மதுக் கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

    தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆகஸ்ட் 4-ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

    இந்தப் போராட்டத்துக்கு தேமுதிக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வணிகர் சங்கங்களின் பேரவை ஆகியவை ஆதரவு தெரிவித்தன. இந்தப் போராட்டத்தையொட்டி, மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

    பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தை, வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேவேளையில், முழு கடைப்புப் போராட்டம் மாநிலத்தில் எந்த இடத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சென்னையில் ஆங்காங்கே சில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தன, பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இதேபோல பேருந்துகள், ஆட்டோக்கள் ஆகியவை வழக்கம்போல இயங்கின.

    இதே நிலைமையே மாநிலத்தின் பிற பகுதிகளிலும் நிலவியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு கடையடைப்பு போராட்டத்தின் பாதிப்பு தெரிந்தது. இங்கு 33 பேருந்துகளின் கண்ணாடிகள் கல்வீச்சில் உடைக்கப்பட்டன. அதேபோல மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai