சுடச்சுட

  

  காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணியை மேற்கொள்ள இடைக்காலத் தடை

  By சென்னை,  |   Published on : 06th August 2015 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணியை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
   சென்னையிலுள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், திருவாரூரைச் சேர்ந்த பி.எஸ்.பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
   நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்ட காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசு நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி),தனியார் நிறுவனத்துடன் இணைந்து மீத்தேன் எரிவாயு எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு முறையான அனுமதியை மாநில அரசிடம் இருந்தும், சுற்றுச் சூழல் துறையிடம் இருந்தும் பெறவில்லை. எனவே, இந்தத் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் நீதிபதி பி.ஜோதிமணி, பேராசிரியர் நாகேந்திரன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
   மீத்தேன் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து காவிரி டெல்டா மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் போது ஓ.என்.ஜி.சி. சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் மீத்தேன் எடுக்கும் திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகளுக்கு மாநில மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவையில்லை. இத்திட்டம் தொடங்கும்போது அனுமதி பெறப்படும் என்று கூறியுள்ளனர்.
   இதை ஏற்க முடியாது. எனவே, காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் பணிக்கு வரும் திங்கள்கிழமை வரை இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்.
   மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது, வேறு ஒரு வழக்கிற்காக ஆஜராகி இருந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மீத்தேன் எரிவாயு திட்டத்தை அமல்படுத்தினால் காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடும்.
   அப்பகுதியை 30 நாள்கள் நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும் கூறினார். எனவே, அவரை இந்த வழக்கில் இந்தத் தீர்ப்பாயத்துக்கு உதவும் நபராக நியமிக்கிறோம். விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai