ஆ. ராசா மீது சொத்துக் குவிப்பு வழக்கு: 20 இடங்களில் சிபிஐ சோதனை

 இந்தச் சோதனைகளின்போது பல்வேறு நிலங்கள், கட்டடங்கள் வாங்கியதற்கான பத்திரங்கள், வருமான வரி ரசீதுகள், இருபது வங்கிக்கணக்குகளின் ஆவணங்கள்,
ஆ. ராசா மீது சொத்துக் குவிப்பு வழக்கு: 20 இடங்களில் சிபிஐ சோதனை

மத்திய அமைச்சராக திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ. 27.92 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக அவர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஷ் குமார் உள்பட 17 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 2007-இல் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ ஏற்கெனவே தில்லி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த வழக்கின் வாதங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ராசா மீது அவர் 1999-2010ஆம் ஆண்டு வரை பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக சிபிஐ புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு ராசாவுக்கு மட்டுமன்றி அவர் சார்ந்துள்ள திமுகவுக்கும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
 17 பேர் மீது வழக்கு: இந்த வழக்கில் ஆ. ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஷ் குமார், சி. கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் சத்யநாராயணன், ராசாவின் சகோதரர் கலியபெருமாள், பரமேஷ்குமாரின் மனைவி கலா, சாதிக் பாட்சா மனைவி ரேஹா பானு, சுப்புடு, பெரம்பலூரைச் சேர்ந்த ஆர். பச்சமுத்து, சென்னையைச் சேர்ந்த புவனேஸ்வரி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சந்தானலட்சுமி, பெரம்பலூரைச் சேர்ந்த செல்வகுமாரி, ராமச்சந்திர கணேஷ், மலர்விழி ராம், ஏ.எம். ஜமால், க்ரீன் ஹவுஸ் புரொமோட்டர்ஸ் நிறுவனம் ஆகிய 17 பேருக்கு எதிராக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
 20 இடங்களில் சோதனை: இதைத்தொடர்ந்து, ராசா வசித்து வரும் தில்லி குல்மொஹர் பார்க் பகுதியில் உள்ள வாடகை பங்களா, சென்னையில் அவர் வசித்து வரும் ஆர்.ஏ.புரம் வீடு உள்பட 6 இடங்கள், கோவையில் 2, பெரம்பலூரில் 8, திருச்சியில் 3 என மொத்தம் 20 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகச் சென்று சோதனையிட்டனர். இந்த சோதனை விவரத்தை தமிழக காவல் துறையினருக்கு தெரிவிக்காமல் மிகவும் ரகசியமாக வைத்திருந்து, புதன்கிழமை காலையில் சிபிஐ அதிகாரிகள் திடீரென நடத்தினர். தில்லியில் இரவு 9 மணி வரை இச்சோதனை நீடித்தது.
நடவடிக்கை ஏன்?
 வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக ராசா உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கு குறித்து தில்லியில் அத்துறை உயரதிகாரி புதன்கிழமை கூறியதாவது: "1999 முதல் 2010-ஆம் ஆண்டுவரை நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய இணை அமைச்சர், கேபினட் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை ராசா வகித்தார். அப்போது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் அவர் சுமார் ரூ.27.92 கோடி அளவுக்கு தனது பெயர், குடும்பத்தினர், நண்பர்கள் பெயர்களில் பல்வேறு நகரங்களில் அசையும், அசையா சொத்துகளை ராசா வாங்கியுள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ராசா சிக்கிய பிறகு இவை தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடச்சியாக 17 பேர் மீதும் சென்னை சிபிஐ செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்து புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டுள்ளது' என்றார்.
பெரம்பலூரில்...
 ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம்,வேலூர் கிராமத்தில் உள்ள அவரது வீடு, சகோதரர் கலியபெருமாளின் வீடு, இவருக்குச் சொந்தமான சிவகாமம் ஏஜென்சீஸ், ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா (2ஜி வழக்கு விசாரணை தொடங்கியபோது சந்தேக முறையில் மரணம் அடைந்தவர்) மனைவி ரேஹா பானு வசித்து வரும் வீடு, திரு நகரில் உள்ள கே. செல்வகுமாரியின் வீடு, நண்பர்கள் சுப்புடு (எ) சுப்பிரமணியன், ஆர். பச்சமுத்து ஆகியோரின் வீடுகள், க்ரீன் ஹவுஸ் புரொமோட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பரமேஷ் குமார் மனைவி கலா வசித்து வரும் வீடு ஆகிய எட்டு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஆறு குழுக்களாகச் சென்று சோதனை நடத்தினர். சாதிக் பாட்சா மனைவி வீட்டில் சோதனை நடத்த அதிகாரிகள் சென்றபோது அங்குள்ள அறை பூட்டப்பட்டிருந்தது.
 அதன் சாவியை அங்கிருந்த பணியாளர்கள் வழங்கவில்லை. இதனால், அந்த அறையின் பூட்டை உடைத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில்...
 சென்னையில் ராசா தங்கும் ஆழ்வார்பேட்டை வீடு, தி.நகர் ராமாராவ் சாலையில் உள்ள க்ரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனம், நுங்கம்பாக்கத்தில் உள்ள உறவினர்களின் இரண்டு வீடுகள், தேனாம்பேட்டையில் உள்ள நண்பர்களின் இரு வீடுகள் என மொத்தம் ஆறு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவையில்...
 கோவையில் ராசாவுக்குச் சொந்தமான விருந்தினர் இல்லம் உள்பட இரு இடத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ராசா முன்பு நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்தபோது அங்கு அலுவலகம், ஓய்வு இல்லம் வைத்திருந்தார். அவற்றுக்கு சிபிஐ அதிகாரிகள் செல்லவில்லை. எனினும், கோவையில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிடும் தகவல் கிடைத்ததும், நீலகிரியைச் சேர்ந்த ராசாவின் ஆதரவாளர்கள் அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்குள் சென்றனர். பிறகு அங்கிருந்த திமுகவினர் அவற்றின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டிக் கொண்டு காவலுக்கு நின்றனர்.
திருச்சியில்...
 திருச்சி திருவானைக்கா சிவராம் நகரில் ராசாவின் சகோதர் ராமச்சந்திரன் வீடு, அவரது கார் ஓட்டுநர் ரவி, ராசாவின் சகோதரி மகன் வெங்கடேசன் ஆகியோர் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
 இந்தச் சோதனைகளின்போது பல்வேறு நிலங்கள், கட்டடங்கள் வாங்கியதற்கான பத்திரங்கள், வருமான வரி ரசீதுகள், இருபது வங்கிக்கணக்குகளின் ஆவணங்கள், வைப்பு நிதி கணக்கு ஆவணங்கள், தனியார் நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகள் போன்றவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவை தொடர்பாக ஆராய்ந்த பிறகு இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com