சுடச்சுட

    

    புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறேன்: கமல்ஹாசன்

    By சென்னை,  |   Published on : 08th December 2015 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    1

    தான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
     சென்னை வெள்ள பாதிப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
     வரிப் பணம் குறித்துக் கேட்கவில்லை: நான் கட்டிய வரிப் பணம் என்னவாயிற்று என்று நான் கேள்வி எழுப்பியதுபோல சில ஊடகங்களில் சில நாள்களுக்கு முன்பு வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பேட்டி அல்ல. மின்னஞ்சல் வழியாக எனது வட நாட்டு பத்திரிகையாளர் நண்பருக்கு எழுதிய ஆங்கிலக் கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது.
     என் கடிதம் தமிழகத்துக்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியைப் பற்றியுமான புலம்பலே. கடிதத்தில் எங்கும் தமிழக அரசு என்ற குறிப்போ, என் வரிப் பணம் என்னவாயிற்று என்ற கேள்வியோ இல்லை. அவ்வளவு சந்தேகம் இருந்திருந்தால் இவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து முழு வருமானத்தையும் சொல்லி அத்தனை வரி கட்டியிருக்கவே மாட்டேன். எந்த நிலையிலும் என் கடமையைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான்.
     என் வீட்டுக்கு சில நாள்களாக செய்தித்தாள் விநியோகம் இல்லை. விட்டு விட்டு வரும் தொலைபேசித் தொடர்பும், எப்போதோ வரும் வலையதள தொடர்பினாலும் என்னைப் பற்றி ஊடகங்களில் வரும் வாதப் பிரதிவாதங்களை நண்பர்கள் சொல்லியே தெரிந்து கொண்டேன்.
     தொடர் முகநூல் வாசியல்ல நான்: எனது சில நண்பர்களைப் போல எப்போதும் ஒரு கண்ணை முகநூலில் வைத்திருக்கும் முகநூல் வாசியல்ல நான். பதில் ஏதும் பேசாமல் இருந்தால் உண்மை தன்னால் வெளிப்படும்; என் உண்மை நிலை புரியும் என்று நான் எண்ணியது தவறு என உணர்கிறேன்.
     என் நற்பணி இயக்கத்தாருடன் தொலைபேசி தொடர்பு கிடைக்கும்போதெல்லாம் பேசி வருவதாலும், அவர்களை எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி மக்களுக்கு உதவ அன்புக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்ததாலும் அவையே முக்கியம் இந்த வாதங்களைப் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அது தவறு; அந்தத் தவறு இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
     பதில் அறிக்கை அல்ல: இது நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி பணியாற்றிக் கொண்டிருக்கும், பல வேறு கட்சிகளுக்கும் ஓட்டு போடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக் கூடாது என்பதற்கே இந்த விளக்கம்.
     மன்னிப்பு கேட்பது கடமை: பக்தரும் பகுத்தறிவாளரும் பல மதத்தாரும் எங்கள் இயக்கத்தில் உண்டு. இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம். தனி மனிதக் கோபங்களைத் தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர் காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட மன்னிப்புக் கேட்க கடமைப்பட்டிருக்கிறேன்.
     வாதப் பிரதிவாதங்களைப் புறந்தள்ளி ஆக்க வேலையில் முன்பு போல முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன்.
     கோபதாபங்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
     தண்ணீரும் கண்ணீரும் வடிந்த பிறகும் கூட, சூழக்கூடும் என அஞ்சும் அபாயங்கள் அண்டாதிருக்க ஆவன செய்வோம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து நற்பணிகளை 36 ஆண்டுகளாக எங்கள் இயக்கம் செய்து வருகிறது.
     நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் எல்லோருடனும் சேர்ந்து ஒத்துழைப்பதே நற்பணிச் சேவைகளைத் தொடரும் அந்த சந்தோஷத்துக்காகவும் சௌகரியத்துக்காகவும்தான் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai