
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டன்துறை காப்பகத்தில் 2013-இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 45 சிறுத்தைகளும், 14 புலிகளும் இருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ. பரப்பளவில் இந்தியாவின் 17-ஆவது புலிகள் காப்பகமாக களக்காடு முண்டன்துறை அமைந்துள்ளது. பல்லுயிர்ப் பெருக்கத்துக்குப் புகழ்பெற்ற இங்கு புலி, சிறுத்தை, மான், மிளா, யானை போன்ற அரிய வகை விலங்கினங்கள், உலகில் வேறெங்கும் இல்லாத தாவர வகைகளும் உள்ளன.
இங்கு விலங்கினங்கள் குறித்த கணக்கெடுப்பு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. காப்பகத்தில் புலிகள் வாழுமிடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தி புலிகள் நடமாட்டம் கண்டறியப்படுகிறது. அடர்ந்த வனப் பகுதியைத் தேர்வு செய்து தரையிலிருந்து 3 அடி உயரத்தில் எதிரெதிரே 2 கேமராக்கள் வீதம் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
2 மாதங்களுக்கு ஒருமுறை கேமரா பதிவுகளைப் பதிவு செய்த பின்னர் வேறு இடங்களில் பொருத்தி புலிகள் நடமாட்டம் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு 300-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கணக்கெடுப்பில் புலிகளின் கால் தடம், எச்சம் போன்றவையும் சேகரிக்கப்படுகின்றன. தடயங்களும், கேமராவில் பதிவாகும் தகவல்களும் ஆக்ராவில் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு அனுப்பப்பட்டு, புலிகள் உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்படும். இந்நிலையில், 2013 டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு குறித்த முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை 163-இல் இருந்து 229 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்திலும் புலிகள், சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 45 சிறுத்தைகளும் 14 புலிகளும் இருப்பது தெரியவந்துள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட அதிகம் என்றும் கணக்கெடுப்பு விவரங்கள் ஒருசில நாள்களில் வெளியிடப்படும் என்றும் வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.