வி.ஏ.ஓ.க்கள் பதவி உயர்வில் புதிய நடைமுறை: தமிழக அரசு உத்தரவு

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (வி.ஏ.ஓ.) பதவி உயர்வு வழங்குவதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (வி.ஏ.ஓ.) பதவி உயர்வு வழங்குவதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது.

இதன்படி, பதவி உயர்வுக்கான தகுதியாக 6 ஆண்டுகள் வி.ஏ.ஓ., பணியை நிறைவு செய்தாலே போதும்.

இதுகுறித்து வருவாய்த் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன் வெளியிட்ட உத்தரவு:

கிராம நிர்வாக அலுவலர்களாக இருப்பவர்களில் 10 ஆண்டுகள் பணியை

முடித்திருந்து உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருந்தால், அவர்களுக்கு மாவட்ட வருவாய்ப் பிரிவுகளில் ஏற்படும் உதவியாளர் காலியிடங்களில் 10 சதவீத இடங்கள் பதவி உயர்வின் மூலம் அளிக்கப்படும். இந்தப் பதவி உயர்வு சில நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவு ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர்களுக்குப் பதவி உயர்வு வழங்கும் போது, அவர்கள் 10 ஆண்டுகள் பணியை முடித்திருக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக 6 ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், இதற்கான பரிந்துரைகளை வருவாய் நிர்வாக ஆணையர் தமிழக வருவாய்த் துறைக்கு வழங்கியிருந்தார். அவரது

பரிந்துரைகளை ஏற்று, உதவியாளர் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் 10 சதவீதத்துக்குப் பதிலாக 30 சதவீத இடங்கள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒதுக்கப்படும்.

மேலும், தமிழ்நாடு அமைச்சகப் பணிகளின் விதிகளுக்கு உள்பட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யும் நிலையில், அவர்களது பதவி உயர்வை நிர்ணயிக்கும் பதவி காலமானது 10 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாகக் குறைக்கப்படும்.

பதவி உயர்வுக்கான தகுதிகள் திருத்தப்பட்டுள்ள நிலையில், அவை குறித்து தமிழ்நாடு அமைச்சகப் பணிகளின் விதிகளிலும் திருத்தம் செய்ய வேண்டும். எனவே, இதற்கான வரைவு திருத்தங்களை ஒரு மாதத்துக்குள் வருவாய் நிர்வாக ஆணையர் வெளியிட வேண்டும் என்று தனது உத்தரவில் வெங்கடேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com