தலைசிறந்த கிராமத்தை உருவாக்கும் இளைஞர் அமைப்பு

திருவள்ளூர் மாவட்டம், ஆலத்தூர் கிராமத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக உதவும் நண்பர்கள் என்ற அமைப்பு பொதுமக்களின் ஒத்துழைப்போடு பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தலைசிறந்த கிராமத்தை உருவாக்கும் இளைஞர் அமைப்பு

திருவள்ளூர் மாவட்டம், ஆலத்தூர் கிராமத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக உதவும் நண்பர்கள் என்ற அமைப்பு பொதுமக்களின் ஒத்துழைப்போடு பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆலத்தூர் ஊராட்சி. இந்த கிராமத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக இங்கு உள்ள இளைஞர்களால் "உதவும் நண்பர்கள்' என்ற அமைப்பு கடந்த 2004-ஆம் ஆண்டு அரசின் அனுமதியுடன் தொடங்கப்பட்டது.

இலவசக் கல்வி, தொழில்பயிற்சி: இதைத் தொடர்ந்து அமைப்பின் சார்பில் விவேகானந்தர் கணினி மையம், அன்னை தெரசா தையல் பயிற்சி நிலையம், அழகுப் பயிற்சி நிலையம் உள்பட பல்வேறு தொழிற்பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன. இவற்றின் மூலம் சுற்றுப் பகுதியில் வசிக்கும் ஏழை மாணவர்கள், பெண்கள், பொது மக்களுக்கு இலவசப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மழலையர் தொடக்கப்பள்ளியில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். ஒரு முதல்வர், துணை முதல்வர் உள்பட 6 ஆசிரியர்கள் இங்கு பணியாற்றுகின்றனர்.

மாணவர்களுக்கு கல்வி, படிப்பதற்குத் தேவையான உபகரணங்கள், விடுதி வசதி, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. ஆலத்தூர், மேட்டுத் தும்பூர், பள்ளத் தும்பூர், எடப்பாளையம் ஆகிய கிராமங்களில் நடத்தப்பட்டு வரும் மாலை நேர இலவசக் கல்வி மையத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

ரூ.20 கட்டணத்தில் மருத்துவம்: உதவும் நண்பர்கள் அமைப்பின் முயற்சியால் ஆலத்தூர் ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவ மையத்தில் ரூ.20 கட்டணத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் ஆம்புலன்ஸ் வசதியும் உள்ளது. மருத்துவ மையத்தில் தினமும் 50 முதல் 70 பேர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

இது குறித்து உதவும் நண்பர்கள் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் டி.ஆர்.சாரதி, உறுப்பினர் எஸ்.பிரகாசம் ஆகியோர் செவ்வாய்க்கிழமை கூறியது:

"உதவும் நண்பர்கள்' அமைப்பில் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் உள்பட மொத்தம் 22 பேர் உள்ளனர். இவர்களுடன் மக்களும் சேர்ந்து பணியாற்றுகின்றனர். கிராம வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக மருத்துவம், தொழில் பயிற்சி, விளையாட்டு மேம்பாடு, சுகாதாரம், அரசின் திட்டங்கள், அங்கன்வாடி மையம், சமூக விழிப்புணர்வு என மொத்தம் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொழில் பயிற்சி மையங்கள் மூலமாக இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். மருத்துவ மையத்தில் இதுவரை 10,245 பேர் பலன் அடைந்துள்ளனர்.

கிராமப்புற மேம்பாடு: நியாய விலைக் கடை, பேருந்து வசதி, சூரிய மின்சக்தி (சோலார்) விளக்குகள், கழிப்பறை வசதி, பொது சேவை மையங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பல்வேறு கட்ட போராட்டங்கள், வலியுறுத்தல்கள் மூலமாகப் பெற்றுத் தந்துள்ளோம்.

இங்கு மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களிலும் தன்னார்வ அமைப்புகள், செங்கல் சூளை உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், கிராம மக்கள் என அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பு உள்ளது. எங்களுக்குத் தேவையான உணவு, உடை, மருந்துகள் போன்றவற்றை இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களே வழங்குகின்றனர். ஆதரவற்றோருக்கு உறுதுணையாக இருப்பதுடன், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளில் முன்னுதாரணமான கிராமத்தை உருவாக்குவதே "உதவும் நண்பர்கள்' அமைப்பின் நோக்கமாகும்.

நிதிப் பற்றாக்குறை: எங்கள் அமைப்புக்கு வரும் நன்கொடைகள், பொருள்கள் என அனைத்துக்கும் தனித்தனியான பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம்.

தற்போது மழலையர் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருவதால் இங்குள்ள கூடுதல் மருத்துவக் கட்டடத்தில் பாடம் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள், தன்னார்வலர்கள் வழங்கும் நன்கொடை பெரும்பாலும் மருத்துவ மையம், மழலையர் பள்ளிக்குச் செலவிடப்படுவதால் மற்றப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்டவர்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கினால் கிராம முன்னேற்றத்துக்கான பணிகளை தடையின்றி மேற்கொள்ள முடியும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com