Enable Javscript for better performance
அரசு கேபிள் டி.வி. மூலம் அனைத்து வட்டங்களிலும் ஒரு மாதத்துக்குள் பொது சேவை மையங்கள்: தமிழக அரசு முடிவு- Dinamani

சுடச்சுட

    

    அரசு கேபிள் டி.வி. மூலம் அனைத்து வட்டங்களிலும் ஒரு மாதத்துக்குள் பொது சேவை மையங்கள்: தமிழக அரசு முடிவு

    By DN  |   Published on : 27th January 2015 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tngov

    அரசு கேபிள் டி.வி. மூலம் அனைத்து வட்டங்களிலும் ஒரு மாதத்துக்குள் பொது சேவை மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இப்போதுள்ள 22 சேவை மையங்கள் மூலமாக இதுவரை 1 லட்சத்து 8 ஆயிரம் மக்கள் பயன்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் கூறியது: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை சீரமைத்து, சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதியும், சென்னை மாநகர ஒளிபரப்பு சேவை கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதியும் கேபிள் டி.வி. சேவை தொடங்கப்பட்டது.

    அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தற்போது 75 கட்டுப்பாட்டு அறைகளிலிருந்து 26,910 கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் 70.52 லட்சம் சந்தாதாரர்களுக்கு கேபிள் டி.வி. சேவையை வழங்கி வருகிறது.

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தமிழகத்தில் உள்ள 254 வட்டங்களிலும் பொது சேவை மையங்களை அமைத்து வருகிறது. பொது மக்களுக்கு அரசின் சேவைகளை பொது சேவை மையங்கள் மூலம் நேர்த்தியாகவும், வெளிப்படையாகவும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே அளிப்பது இதன் நோக்கம். இச்சேவை மையங்கள் மூலம், கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட அரசின் சேவைகள் வழங்கப்படுகின்றன. 

    இந்தச் சேவையானது கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, சென்னையில் 10 வட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 12 வட்டங்களில் பொது சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த சேவை மையங்கள் மூலம் இதுவரை சுமார் 1,08,776 மக்கள் பயன் பெற்றுள்ளனர். ஏற்கெனவே உள்ள 22 பொது சேவை மையங்கள் நீங்கலாக, தமிழகத்தில் மீதமுள்ள 232 வட்டங்களிலும் பொது சேவை மையங்கள் அடுத்த மாதம் 28-ஆம் தேதிக்குள் நிறுவப்பட்டு சேவைகள் தொடங்கப்படும்.

    மேலும், இந்த பொது சேவை மையங்கள் மூலம் மின் கட்டணத்தை செலுத்தும் வசதியும் விரைவில் ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai