Enable Javscript for better performance
தமிழ்ப் பல்கலை.யின் புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான குழு தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் பல்கலை.யின் புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான குழு தேர்வு

    By DN  |   Published on : 27th January 2015 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தற்போதைய துணைவேந்தரின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ம. திருமலை கடந்த 2012-ஆம் ஆண்டு பிப். 10-இல் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் வரும் பிப். 9-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதில், பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர்களான அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் பழ. முத்துவீரப்பன், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியர் அ. அறிவுநம்பி, பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் முன்னாள் முதல்வர் உரு. ராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதுதவிர, அரசு, ஆளுநர் தரப்பில் தலா ஒருவர் நியமிக்கப்படுவர். இவர்களும் நியமிக்கப்பட்ட பிறகு 5 பேர் கொண்ட குழுத் தகுதியான நபரைத் துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கும்.

    பொறுப்புக் குழு: துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகும், புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் வரையிலும் உள்ள இடைப்பட்ட காலத்தில் பல்கலைக்கழகத்தின் அன்றாடப் பணிகளை மேற்கொள்வதற்காகத் துணைவேந்தர் பொறுப்புக் குழு நியமிப்பது வழக்கம்.

    இதன்படி, துணைவேந்தர் பொறுப்புக் குழு அமைப்பாளராகத் தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் மு. ராசாராம், உறுப்பினர்களாகப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர்களான தமிழ்ப் பல்கலைக்கழகக் கலைப் புலத் தலைவர் இ. அங்கயற்கண்ணி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல், பண்பாட்டுப் புலத் தலைவர் சு. பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    இதுதொடர்பாக ஆட்சிக் குழு உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்று தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான கே. ரோசய்யாவிடம் ஒப்புதல் பெறுவதற்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனப் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai