Enable Javscript for better performance
என்னிடம் விளக்கம் கேட்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை: கார்த்தி சிதம்பரம் கடிதம்- Dinamani

சுடச்சுட

    

    என்னிடம் விளக்கம் கேட்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை: கார்த்தி சிதம்பரம் கடிதம்

    By dn  |   Published on : 28th January 2015 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karthik_chidambaram

    என்னிடம் விளக்கம் கேட்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் தொடங்கியுள்ள "ஜி 67' (1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த தலைமுறையினர்) என்ற புதிய அமைப்பின் கூட்டம் கடந்த வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது.

    அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடும் வகையில் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கட்சிக்கு எதிராக கூட்டம் நடத்தியதற்காக, உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு வரும் 30-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில் கட்சியிலிருந்து நீக்கப்படுவீர்கள் என கார்த்தி சிதம்பரத்துக்கு இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பினார்.

    இந்த நிலையில், இளங்கோவனுக்கு கார்த்தி சிதம்பரம் செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடிதம்:

    ஜனவரி 23-ஆம் தேதி நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. கடந்த 22-ஆம் தேதி எனது நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் மதிய விருந்து அளித்தேன். அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் கொடி, சின்னம் உள்பட எந்த அடையாளத்தையும் பயன்படுத்தவில்லை.

    இந்த விருந்து நிகழ்ச்சியில் பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்களும் கலந்து கொள்ளவில்லை. எனவே, நான் பேசியதை நீங்கள் பத்திரிகை, தொலைக்காட்சி மூலம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    நான் பேசியதை முழுமையாக உள்வாங்கி இருந்தால், நான் நமது கட்சித் தலைமையையோ, கொள்கைகளையோ விமர்சிக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்திருக்கும். எனவே, இதில் விளக்கம் கேட்பதற்கும், விளக்கம் அளிப்பதற்கும் எதுவும் இல்லை.

    நான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கோ, என்னிடம் விளக்கம் கேட்பதற்கோ அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கே அதிகாரம் உள்ளது.

    எனவே, தாங்கள் என் மீதான குற்றச்சாட்டுகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு தெரிவித்து, அவர்கள் என்னிடம் கேட்டால், விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சென்றுவிட்டதால் மாநிலப் பொருளாளர், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட பதவிகள் காலியாக உள்ளன. இதில் மாநிலப் பொருளாளர் பதவியை தனக்கும், மாவட்டத் தலைவர்கள் பதவிகளை தனது ஆதரவாளர்களுக்கும் கேட்டு கார்த்தி சிதம்பரம் நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

    "கடிதம் கிடைத்த பிறகு நடவடிக்கை'

    தன்னிடம் விளக்கம் கேட்க மாநிலத் தலைமைக்கு அதிகாரம் இல்லை என்ற கார்த்தி சிதம்பரத்தின் கடிதம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் கேட்டபோது, தன் மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா. சபைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று கூறாமல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்காவது அதிகாரம் இருக்கிறது என்று கூறினாரே அதுவரை மகிழ்ச்சி. கார்த்தி சிதம்பரம் எழுதிய கடிதம் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்ததும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai