Enable Javscript for better performance
ஏழைகள் மீது அக்கறை இல்லாதவர் மோடி: இளங்கோவன்- Dinamani

சுடச்சுட

    
    evks

    பிரதமர் நரேந்திர மோடி ஏழைகள் மீது அக்கறை இல்லாதவர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அப்போது இளங்கோவன் பேசியது:

    முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை கிடைத்து வந்தது. கிராமங்களில் உள்ள தலித்துகள், பெண்கள், ஆதரவற்றவர்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர்.

    மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றதும் இந்தத் திட்டத்தை முடக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் செயல்படுத்தப்பட்டு வந்த இந்தத் திட்டம், நிகழாண்டு முதல் சுமார் 64 ஒன்றியங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இது ஏழை, எளிய மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகும்.

    ஆண்டுக்கு 100 நாள் வேலை அளிக்கும் திட்டத்தை புகழ்ந்த ஐ.நா. சபை, வளர்ந்து வரும் நாடுகள் இந்தத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியது. ஆனால், மோடி அரசு இந்தத் திட்டத்தை முடக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

    சாதாரண ஏழை, எளியவர்கள் பற்றி மோடிக்கு அக்கறை இல்லை. அவர் மன்னர் பரம்பரையைப் போல செயல்பட்டு வருகிறார். இந்தியா வந்த, உலகின் பணக்கார நாடான அமெரிக்க அதிபர் ஒபாமா காலையில் இருந்து மாலை வரை ஒரே ஆடையை அணிந்து இருந்தார். ஆனால், மோடி விதவிதமான ஆடைகளை அணிகிறார். அவர் மீதான காழ்ப்புணர்ச்சியில் குற்றம்சாட்டவில்லை. மக்களின் குறைகளைப் போக்குவதில் கவனம் செலுத்தாமல் ஆடை அலங்காரங்களில் கவனம் செலுத்தினால் மோடி அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றார் இளங்கோவன்.

    ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை குஷ்பு, "பாஜக ஆட்சியில் மக்கள் யாரும் நிம்மதியாக இல்லை. 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்கள் தங்களது குடும்பச் செலவுகளைச் சமாளித்து வந்தனர். இந்தத் திட்டத்தை முடக்குவதன் மூலம் ஏழைகளின் வாழ்வில் மோடி அரசு விளையாடுகிறது. இந்தத் திட்டத்தை ஒருபோதும் ரத்து செய்ய விடமாட்டோம். அப்படி நடந்தால் மக்களைத் திரட்டிப் போராடுவோம்' என்றார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன், ஜே.ஜி. பிரின்ஸ் எம்.எல்,ஏ., எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai