Enable Javscript for better performance
சென்னையில் உ.வே.சா. வசித்த இடத்தில் நினைவில்லம் அமைக்க வேண்டும்: ராமதாஸ்- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் உ.வே.சா. வசித்த இடத்தில் நினைவில்லம் அமைக்க வேண்டும்: ராமதாஸ்

    By dn  |   Published on : 28th January 2015 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramadoss

    தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் சென்னையில் வசித்த வீடு இருந்த இடத்தை வாங்கி நினைவில்லம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

    இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டையில் தமிழ் தாத்தா உ.வே.சா. வசித்த இல்லம் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

    தமிழுக்கு உ.வே.சா. ஆற்றிய பணிகள் மகத்தானவை. அழியும் நிலையில் இருந்த சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, நெடுநெல்வாடை உள்ளிட்ட 90-க்கும் அதிகமான இலக்கியச் சுவடிகளை புத்தகங்களாகத் தொகுத்து தமிழ்ச் சமுதாயத்துக்குப் பரிசளித்தவர்.

    1874-இல் தனது 19-ஆவது வயதில் இந்தப் பணியைத் தொடங்கிய அவர், 68 ஆண்டுகள் ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்.

    சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றியபோது, முதலில் வாடகைக்கு இருந்து பின்னர் விலைக்கு வாங்கிய வீடுதான் தற்போது இடிக்கப்பட்டுள்ளது.

    மகாகவி பாரதியாருக்கு அவர் பிறந்த எட்டையபுரத்தில் மணி மண்டபம் இருந்தாலும், சென்னையில் அவர் வசித்த வீடு வாங்கப்பட்டு நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது.

    லண்டனில் டாக்டர் அம்பேத்கர் வசித்த வீட்டை ரூ.35 கோடிக்கு வாங்கி, அவரின் 125-ஆவது பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதி நினைவில்லமாக திறந்து வைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

    அதுபோல, தமிழ் தாத்தா உ.வே.சா. 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த வீட்டை வாங்கி நினைவில்லம் அமைக்க வேண்டும். அடுத்த மாதம் 19-ஆம் தேதி உ.வே.சா.வின் 160-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், அன்று நினைவு இல்லத்துக்கு அடிக்கல் நாட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai