Enable Javscript for better performance
தமாகா இளைஞர் அணி பேருந்து பிரசாரப் பயணம்: வாசன் தொடக்கி வைத்தார்- Dinamani

சுடச்சுட

  

  தமாகா இளைஞர் அணி பேருந்து பிரசாரப் பயணம்: வாசன் தொடக்கி வைத்தார்

  By dn  |   Published on : 28th January 2015 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vasan

  தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) இளைஞர் அணியின் பேருந்து பிரசாரப் பயணத்தை அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.

  தமாகா உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்காக இளைஞரணி பொறுப்பாளர் எம். யுவராஜா தலைமையில் நடைபெறும் இந்தப் பயணத்தை சென்னை ஜிம்கானா கிளப் காமராஜர் சிலை அருகே வாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது:

  திருச்சியில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தொடக்க விழா பொதுக் கூட்டம் தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. திருச்சியில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் இந்தியத் தலைவர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.

  அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கினோம். கடந்த 50 நாள்களுக்குள் தமிழகம் முழுவதும் 32 லட்சம் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு மகத்தான சாதனையாகும்.

  தமிழக அரசியல் கட்சிகளில் அதிகமான இளைஞர்களைக் கொண்ட கட்சி தமாகா மட்டுமே. திருச்சி பொதுக் கூட்டத்துக்கு வந்தவர்களில் 50 சதவீதம் பேர் இளைஞர்கள். பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் தமாகாவில் உறுப்பினர்களாக இணைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

  உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துவதற்காக யுவராஜா தலைமையில் இளைஞரணி பொறுப்பாளர்கள் நடத்தும் இந்த பேருந்து பிரசாரப் பயணம் பிப்ரவரி 5-ஆம் தேதி கன்னியாகுமரியில் நிறைவு பெறுகிறது. 20 மாவட்டங்கள், 103 சட்டப்பேரவைத் தொகுதிகள், 6 மாநகராட்சிகள், 500-க்கும் அதிகமான கிராம ஊராட்சிகள் வழியாக 2,000 கி.மீ. தொலைவுக்கு இந்தப் பயணம் செல்கிறது. இதன் மூலம் அதிகமான இளைஞர்கள் தமாகாவில் இணைவார்கள் என்றார் வாசன். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

  தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களைத் தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவ வசதிகளை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

  குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்திகளில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றுள்ளது. நடக்கும் அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள் என்பதை உணர்ந்து அதற்கேற்ப தமிழக அரசு செயல்பட வேண்டும்.

  ப. சிதம்பரம் தமாகாவில் இணைய இருப்பதாக வெளியான செய்தி தவறானது. தமிழக காங்கிரஸில் நடப்பது அக்கட்சியின் உள்விவகாரம். எனவே, அதுகுறித்து கருத்துக் கூற விரும்பவில்லை என்றார் வாசன்.

  தமாகா மூத்த தலைவர்கள் பி.எஸ். ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன், முன்னாள் எம்.பி.க்கள் பெ. விசுவநாதன், ராணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோவை தங்கம், விடியல் சேகர், இளைஞரணி பொறுப்பாளர் எம். யுவராஜா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

  அரசியல் சாசனப்படி செயல்பட வேண்டும்

  மதப் பிரசாரம் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து தமாகா தலைவர் ஜி.கே. வாசனிடம் கேட்டபோது, அரசு அதிகாரிகள் அனைவரும் அரசியல் சாசன விதிகளின்படி செயல்பட வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai