Enable Javscript for better performance
தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ காவலில் எடுக்க அனுமதி மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ காவலில் எடுக்க அனுமதி மறுப்பு

    By dn  |   Published on : 28th January 2015 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சன் தொலைகாட்சிக்கு நவீன தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலர் உள்பட மூன்று பேரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிஐ தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    மேலும், இவர்கள் மூவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான உத்தரவையும் புதன்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    தயாநிதி மாறன் (திமுக) மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, 323 தொலைபேசி இணைப்புகளைத் தனது சகோதரர் கலாநிதி மாறனின் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு முறைகேடாக வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தயாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். முன்னாள் பொது மேலாளர் கே.பிரம்மநாதன், முன்னாள் துணைப் பொது மேலாளர் எம்.பி. வேலுச்சாமி ஆகியோர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

    இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், தொழில்நுட்ப அதிகாரி கே.எஸ்.ரவி, தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலர் வே.கெüதமன் ஆகியோர் கடந்த 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பிப்ரவரி 4-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூவரையும் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சிபிஐ சிறப்பு முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜே.கிருஷ்ணமூர்த்தி முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மனு மீது செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மூவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ், ரமேஷ், வழக்குரைஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

    அப்போது, மனுதாரர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறவில்லை. முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். முன்னாள் பொது மேலாளர்கள் பிரம்மநாதன், வேலுச்சாமி ஆகிய மூவரின் பெயர்கள் மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளன.

    மனுதாரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, அதனால்தான் அவர்களைக் கைது செய்தோம் என சிபிஐ தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது. ஆனால், அவர்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்துள்ளனர். இது தவிர, அதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என வாதாடினர்.

    இதைத் தொடர்ந்து, சிபிஐ தரப்பில் வழக்குரைஞர் எஸ்.நடராஜன் ஆஜராகி முதல் தகவல் அறிக்கை என்பது தகவல் களஞ்சியம் அல்ல. அதில் அனைத்துத் தகவல்களும் அதில் இடம்பெறாது.

    மேலும், இப்போதைய வாதம் இந்த வழக்கின் இறுதி வாதமும் அல்ல. வழக்குக்குத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. மத்திய அமைச்சர் தனக்கென மூன்று இணைப்புகளையும், இரண்டு செல்லிடப்பேசி இணைப்புகளை மட்டுமே சட்ட ரீதியாக பெற முடியும்.

    ஆனால், தயாநிதி மாறன் 323 இணைப்புகளைப் பெற்று, சன் தொலைக்காட்சிக்கு முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார். இதற்கு உறுதுணையாக தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூவரும் செயல்பட்டுள்ளனர்.

    சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், சன் தொலைக்காட்சியின் அன்றாட செயல்களுக்கான முக்கியப் பொறுப்பாளர். இவர், கோபாலபுரத்தில் உள்ள தயாநிதி மாறனின் வீட்டில் பி.எஸ்.என்.எல். இணைப்புகள், தொழில்நுட்பக் கருவிகள் ஆகியவற்றை நிறுவுவதற்கு முக்கிய நபராக இருந்துள்ளார். தொழில்நுட்ப அதிகாரியான ரவி, தயாநிதி வீட்டில் நிறுவப்பட்ட தொழில்நுட்பக் கருவிகள், இணைப்புகளைப் பராமரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். இதற்காக பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

    அந்த இணைப்புகளில் மிகப் பெரிய பிரச்னை ஏதும் ஏற்பட்டால் மட்டுமே அதிகாரிகளை வீட்டுக்குள் அனுமதித்துள்ளார்.

    மேலும், கெüதமன், இந்த இணைப்புகளைப் பெற்றுத் தருவதற்கு முக்கியப் பொறுப்பாளராக இருந்துள்ளார். அவருக்கு அரசு வழங்கும் பணத்தை தனி நபருக்காகப் பயன்படுத்தி உள்ளார்.

    இவர்கள் மூவரையும் ஜாமீனில் விட்டால், சாட்சியங்களையும், ஆதாரங்களையும் அழிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இவர்களது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என நடராஜன் வாதாடினார்.

    அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை புதன்கிழமை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து காவலில் எடுத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கோரிய சிபிஐ மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். காவலில் எடுத்து விசாரிப்பதற்கு உரிய காரணத்தை சிபிஐ தெரிவிக்கவில்லை என்று கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai