Enable Javscript for better performance
போலி வாக்காளர் விவகாரம்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக மீண்டும் மனு- Dinamani

சுடச்சுட

    

    போலி வாக்காளர் விவகாரம்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக மீண்டும் மனு

    By dn  |   Published on : 28th January 2015 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்காளர் பட்டியலில் ஒரே நபர் இரண்டு இடங்களில் இடம் பெற்றிருப்பதாக திமுக மீண்டும் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக வழக்குரைஞர்கள் ஆர்.எஸ்.பாரதி தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.

    அந்த மனுவின் விவரம்:

    கடந்த 5-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. ஒரே வாக்காளரின் பெயர் பல இடங்களில் இடம்பெற்றுள்ளதுடன், வாக்காளர்கள் கோரியும் அவர்களது முகவரி உள்ளிட்ட விவரங்கள் திருத்தப்படவில்லை. இறந்த பலருடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதுடன், விண்ணப்பிக்காதவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

    போலி வாக்காளர்கள் பலர் இடம்பெற்றுள்ளது தொடர்பாக, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் முன், தங்களின் பார்வைக்கு கொண்டு வந்தோம். ஆனால், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலிலும் குறைபாடுகள் உள்ளன. இதுகுறித்து, கடந்த 19-ஆம் தேதி கடிதம் மூலம் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம். வாக்காளர் பட்டியலில் 9 ஆயிரம் பேரின் பெயர்கள் இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளன.

    போலி வாக்காளர்களைக் கொண்டப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் வாக்களிப்பதில் இருந்துத் தடுக்கப்படுவர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதியளித்தார். ஆனால், ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    போலி வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. எனவே, வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்களைக் கண்டறிந்து அவற்றை நீக்க வேண்டும். புதிதாக பட்டியல் தயாரித்து அதை வாக்குச் சாவடிகளுக்கும், வாக்குச் சாவடி முகவர்களுக்கும் வழங்க வேண்டும்.

    இந்தப் பிரச்னை தொடர்பாக தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்துவதை உறுதி செய்திட வேண்டும் என்று மனுவில் திமுக தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai