Enable Javscript for better performance
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நீட்டிக்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நீட்டிக்கப்படுமா?

    By dn  |   Published on : 28th January 2015 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவது மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுமா என்று காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    ஆனால், நிகழாண்டில் ஜூன் 12-ஆம் தேதி, மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால், பாசனத்துக்கு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடவில்லை. அணைக்குப் போதிய அளவு தண்ணீர் வந்த பிறகு, ஆகஸ்ட் 10-ஆம் தேதிதான் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    மேட்டூர் அணை மூலம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் உள்பட 11 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. இன்று (புதன்கிழமை) ஜனவரி 28-ஆம் தேதி என்பதால் காவிரி டெல்டா பாசனத்துக்கு, மேட்டூர் அணையிலிருந்துத் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட வேண்டும். ஆனால், டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்னும் அறுவடை முடியாமல் இருப்பதால், தண்ணீர் திறந்துவிடுவதை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதனால், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

    நிகழாண்டில் செவ்வாய்க்கிழமை (ஜன.27) வரை மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 145 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 81.02 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 220 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர் இருப்பு 42.97 டி.எம்.சி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai