Enable Javscript for better performance
யானைகள் நலவாழ்வு முகாம் நிறைவு- Dinamani

சுடச்சுட

    
    elephant_camp

    மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் 48 நாள்கள் நடைபெற்ற யானைகள் நலவாழ்வு முகாம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

    தமிழகத்திலுள்ள திருக்கோயில், மடங்களைச் சேர்ந்த யானைகளின் உடலும், மனமும் புத்துணர்வு பெறும் வகையில், தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி அருகே, பவானி ஆற்றுப் படுகையில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி, நிகழாண்டு இந்துசமய அறநிலையத் துறை சார்பில் கடந்த 2014, நவம்பர் 11-ஆம் தேதி முதல் நடைபெற்ற முகாமில் 30 யானைகள் பங்கேற்றன.

    இதில், தமிழகக் கோயில்களைச் சேர்ந்த குறைந்த வயதுடைய கள்ளழகர் கோயில் யானை சுந்தரவள்ளி (8), அதிக வயதுடைய பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் யானை கஸ்தூரி (48) ஆகியவற்றுடன், புதுவை மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, காரைக்கால் தர்பாரண்யேஸ்வரர் கோயில் யானை பிரக்ருதி உள்ளிட்ட 30 யானைகள் பங்கேற்றன.

    முகாம் நிறைவடைந்த நிலையில் கோயில் யானைகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) மாலை முதல் தங்கள் இருப்பிடங்களுக்குப் புறப்பட்டுச் சென்றன. முகாம் நிறைவுநாள் நிகழ்ச்சியையொட்டி, அனைத்து யானைகளும் ஆற்றில் குளிக்க வைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டன.

    பின்னர் முகாமின் மையப்பகுதியில் அனைத்து யானைகளும் வரிசையாக நிறுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து முகாமிற்கு வந்திருந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் காமராஜ், வரிசையாக நின்றிருந்த யானைகளுக்கு கரும்பு, வெல்லம், பழங்களை ஊட்டினார்.

    பின்னர் பச்சைக் கொடியசைத்து யானைகளை வழியனுப்பி வைத்தார். அங்கிருந்த யானைகள் அனைத்தும் பாகன்கள் துணையுடன் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.

    முதலாவதாக மாலை 6.30 மணியளவில் திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலைச் சேர்ந்த ஆண்டாள் யானை முகாமிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

    அதைத்தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து யானைகளும் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் தமிழக இந்து-சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால், இணை ஆணையர் இளம்பரிதி, கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஓ.கே.சின்னராஜ், சேலஞ்சர் துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai