Enable Javscript for better performance
வாடகை கார்களுக்கான புதிய வழிகாட்டுதல் நடைமுறைக்கு வருவது எப்போது?- Dinamani

சுடச்சுட

    

    வாடகை கார்களுக்கான புதிய வழிகாட்டுதல் நடைமுறைக்கு வருவது எப்போது?

    By dn  |   Published on : 28th January 2015 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாடகை கார்களை முறைப்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல் நடைமுறைக்கு வருவது எப்போது என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையேயும், வாடகை கார் உரிமையாளர்களிடையேயும் எழுந்துள்ளது.

    சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, தில்லி சம்பவம் ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழகத்தில் வாடகை கார்களை முறைப்படுத்துவதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

    கடந்த டிசம்பர் 10-ஆம் தேதியன்று காலையில் காவல் துறை கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் தலைமையில் பயணிகள் பாதுகாப்பு குறித்து கால் டாக்ஸி நிறுவனர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

    மாலையில் போக்குவரத்து ஆணையர் சத்யபிரத சாகு தலைமையில் கட்டணம் உள்ளிட்ட பிற நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

    இதில், இப்போது நடைமுறையில் வசூலிக்கப்படும் கட்டணம், பின்பற்றப்படும் பயணிகள் பாதுகாப்பு நடைமுறைகள், கார் இயக்க நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

    பின்னர், ஜனவரி முதல் வாரத்தில் கோவையில் நடைபெற்ற போக்குவரத்துப் போலீஸார் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில், வாடகை கார், ஆட்டோக்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு வரைவு விதியை தமிழக அரசு உருவாக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், இந்த வரைவு விதிகள் அனைவருக்கும் தெரியும் வகையில் வெளியிடப்படவில்லை. மேலும், இந்த விஷயத்தில் போக்குவரத்து அதிகாரிகள் ஆரம்பத்தில் காட்டிய வேகம் இப்போது இல்லை.

    சில வாடகை கார் நிறுவனங்கள் தொடர்ந்து செல்லிடப்பேசி மூலமான கட்டண மீட்டர்களைப் பயன்படுத்தி கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாகி வருகிறது என வாடகை கார் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதுதொடர்பாக கடந்த 21-ஆம் தேதி மனு ஒன்றையும் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு வாடகை கார் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி பி.ஆர். சாமி கூறியது:

    வாடகை கார் ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தனிக் குறியீடு எண் கொண்ட அடையாள அட்டை வழங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை உள்ளடக்கிய வரைவு விதியை தமிழக அரசு உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்த எந்தவிதத் தகவல்களும் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

    மேலும், சில வாடகை கார் நிறுவனங்கள் தொடர்ந்து செல்லிடப்பேசி மூலமான கட்டண மீட்டர்களையே பயன்படுத்தி கட்டணம் வசூலித்து வருகின்றன. இதுபோன்ற ஒருசில நிறுவனங்களால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது.

    எனவே, செல்லிடப்பேசி கட்டண மீட்டரை தடை செய்யவேண்டும். ஒரே மாதிரியான கட்டண மீட்டர், ஒரே மாதிரியான கட்டண முறையை அறிமுகம் செய்ய வேண்டும். புதிய வழிகாட்டுதலை அரசு விரைவில் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 21-ஆம் தேதி போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai