Enable Javscript for better performance
விஷம் கலந்த மது குடித்த 4 பேர் சாவு தலைமறைவான பட்டதாரி இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    விஷம் கலந்த மது குடித்த 4 பேர் சாவு தலைமறைவான பட்டதாரி இளைஞர் கைது

    By dn  |   Published on : 28th January 2015 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே விஷம் கலந்த மது குடித்து 4 பேர் உயிரிழந்த வழக்கில், தலைமறைவான பட்டதாரி இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

    சங்கராபுரத்தை அடுத்த உலகுடையான்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (30), பட்டதாரி. இவர், புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் வாங்கி வந்திருப்பதாகக் கூறி, அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் (42), முனியன் (58), மூர்த்தி (36) ஆகியோரை மது அருந்த ஞாயிற்றுக்கிழமை அழைத்துள்ளார். அப்போது ராமகிருஷ்ணன் தன்னுடன் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த நண்பர் பஞ்சாசலம் என்பவரையும் அழைத்து வந்துள்ளார்.

    இவர்கள் 4 பேருக்கும் ராமகிருஷ்ணன் மது ஊற்றி கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் 4 பேரும் மயங்கி விழுந்தனர்.

    மதுவில் ராமகிருஷ்ணன் விஷம் கலந்திருந்தது தெரிய வந்தது. சிறிது நேரத்தில் பஞ்சாசலம், முனியன், மூர்த்தி ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். கனகராஜ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பின்னர் ராமகிருஷ்ணன் அங்கிருந்து தலைமறைவானார்.

    இதுகுறித்து சங்கராபுரம் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக காவல் துணைக் கண்காணிப்பாளர் வீமராஜ், ஆய்வாளர்கள் செல்வராஜ், தமிழ்வாணன் தலைமையில் தனிப்படை அமைத்து, தலைமறைவான ராமகிருஷ்ணனை தேடி வந்தனர்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் பதுங்கி இருந்த அவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai